ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு முன்பு பாலக்காடு மாவட்டத்தில் சாலையோரம் பச்சிளம் பெண் குழந்தை ஒன்று கிடந்துள்ளது. அதனை உயிருடன் கண்டுபிடித்த பிச்சை எடுக்கும் கும்பல், அக்குழந்தையை வைத்து தங்கள் தொழிலை நடத்தத் தொடங்கினர். ஆனால் இந்த விவகாரம் சமூக ஆர்வலர்களுக்கு தெரியவரவே அந்தக் குழந்தை மீட்கப்பட்டது. பின்னர் இந்த விவகாரம் செய்தியாய் பரவ, நடிகர் சுரேஷ் கோபி அந்தக் குழந்தையை சந்தித்து தன்னுடைய ஆதரவையும், உதவிகளையும் செய்தார். பின்னர் நாட்கள் கடந்தோடியது. இந்நிலையில் தற்போது 20 ஆண்டுகளுக்கு பிறகு அந்தக் குழந்தை குறித்து சுரேஷ் கோபிக்கு தகவல் கிடைத்துள்ளது. பாலக்காட்டுக்கு நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்ற சுரேஷ் கோபியிடம், நீங்கள் ஆதரவு கொடுத்த அந்த பெண் குழந்தை தற்போது குடும்பத் தலைவியாக இங்குதான் வசிப்பதாக சிலர் தெரிவித்துள்ளனர். இதனை அறிந்த சுரேஷ் கோபி அவரது வீட்டுக்குச் சென்றார்.
அன்று சிறுமியாக இருந்தவர் இன்று ஒரு குடும்பத் தலைவியாக உள்ளார். சதீஷ் என்பவரின் மனைவியாக இருக்கும் ஸ்ரீதேவிக்கு ஷிவானி என்ற மகளும் உள்ளார். பாலக்காட்டில் சிறிய வீட்டில் வசித்து வரும் ஸ்ரீதேவி வளையல் கடை நடத்தி வருகிறார்.
தன்னை மீட்டெடுத்து காப்பாற்றிய சுரேஷ் கோபி தன்னை சந்திக்க வருவதை அறிந்த ஸ்ரீதேவி மகிழ்ச்சியில் திக்குமுக்காடினார். வீட்டுக்கு வந்த சுரேஷ் கோபியை கட்டியணைத்து கதறி அழுதுள்ளார் ஸ்ரீதேவி. இது பார்ப்போரை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. வெறுங்கையோடு போகாமல் கையில் ஸ்வீட்டுடன் சென்ற சுரேஷ் கோபி ஸ்ரீதேவியுடனும், அவரது கணவர் மற்றும் மகளுடன் அமர்ந்து பேசினார். பின்னர் காரில் ஏறி புறப்பட்ட சுரேஷ் கோபியை பிரிய மனமின்றி கையசைத்து அனுப்பி வைத்துள்ளது ஸ்ரீதேவியின் குடும்பம். ஒரு அழகான இந்த சந்திப்பை பலரும் நெகிழ்ச்சியாக பதிவிட்டு வருகின்றனர்.
முன்னதாக, சில தினங்களுக்கு முன்பு சுரேஷ் கோபி சர்ச்சையில் சிக்கினார். ஜீப்பில் சென்றபோது ஒல்லூர் காவல் துணை ஆய்வாளரைப் பார்த்து தனக்கு சல்யூட் அடிக்கச் சொன்னதாக சர்ச்சை எழுந்தது. அப்போது சுரேஷ் கோபி, நான் எம்.பி. எனக்கு மரியாதை கொடுக்க வேண்டும். சல்யூட் அடியுங்கள் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி சர்ச்சையானது. இது குறித்து சுரேஷ் கோபி மாத்ருபூமி செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில், "கேரள அரசு எம்.பி.களுக்கு சல்யூட் அடிக்கக் கூடாது என போலீஸாருக்கு உத்தரவிட்டிருந்தால், அந்த உத்தரவை முதலில் ராஜ்யசபா சேர்மனுக்கு அனுப்ப வேண்டும். பின்னர் ராஜ்யசபா உறுப்பினர்களுக்கு அனுப்பியிருக்க வேண்டும். ஆனால் எனக்குத் தெரிந்து கேரளாவில் அப்படி ஏதும் உத்தரவில்லை என நினைக்கிறேன்" என்று தெரிவித்தார்.