அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க குஜராத் உயர் நீதிமன்றம் மறுத்த நிலையில், அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.


ராகுல் காந்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் பரபர உத்தரவு: 


நீதிபதிகள் பி.ஆர். கவாய், பி.எஸ். நரசிம்மா, சஞ்சய் குமார் ஆகியோர் கொண்ட அமர்வு, இந்த வழக்கை விசாரித்து தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது. பல முக்கியத்துவம் வாய்ந்த கருத்துக்கள், இந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளகது. "இந்திய தண்டனை சட்டம் பிரிவு 499இன் கீழ் அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் வழங்கலாம்.


கற்றறிந்த விசாரணை நீதிபதி, அதிகபட்ச தண்டனையான இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை வழங்கியுள்ளார். இந்த அவதூறு வழக்கின் விசாரணையின் போது மனுதாரருக்கு (ராகுல் காந்தி) அறிவுரை வழங்கியதை தவிர, கற்றறிந்த நீதிபதியால் வேறு எந்த காரணமும் வழங்கப்படவில்லை.


அதிகபட்ச தண்டனை வழங்கியதற்கான காரணத்தை சொல்லாத நீதிபதி:


அதிகபட்ச தண்டனையான இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டதால்தான் மக்கள் பிரிதிநிதித்துவ சட்டப் பிரிவு 8(3) கீழ் நாடாளுமன்ற உறுப்பினராக ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஒரு நாள் குறைவாக தண்டனை வழங்கியிருந்தாலும் இந்த சட்ட பிரிவு பொருந்தி இருக்காது.


குறிப்பாக, ஜாமீன் பெறக்கூடிய வழக்கில், அதிகபட்ச தண்டனை வழங்கியதற்கான காரணத்தை, குறைந்தபட்சம் விசாரணை நீதிபதி சொல்லியிருக்கலாம். எண்ணிலடங்கா ஆவணங்களை ஆய்வு செய்த பிறகு, மாவட்ட நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும் மனுதாரரின் விண்ணப்பங்களை நிராகரித்த போதிலும், மேல் கூறிய அம்சங்களை நீதிமன்றங்கள் பரிசீலிக்கவில்லை.


அதே சமயத்தில், ராகுல் காந்தியின் தெரிவித்த கருத்துகள் நல்ல ரசனையில் இல்லை. பொது வாழ்வில் இருப்பவர், மக்கள் முன்பு பேசும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.


மக்கள் பிரிதிநிதித்துவ சட்டப் பிரிவின் 8(3) விளைவுகளை கருத்தில் எடுத்து கொண்ட பார்த்தால், அது மனுதாரரின் உரிமைகளின் மீது மட்டும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. அவரே தேர்ந்தெடுக்க மக்களின் உரிமைகளின் மீதும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அதேபோல, அதிகபட்ச தண்டனையை வழங்குவதற்கான எந்த காரணமும் விசாரணை நீதிமன்றத்தால் கூறப்படவில்லை என்பதை கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது" என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து, மக்களவை சபாநாயகருக்கு காங்கிரஸ் தரப்பில் கடிதம் எழுத உள்ளதாக மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் அதீர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் கூறுகையில், "மக்களவை சபாநாயகருக்கு இன்றே கடிதம் எழுதுவேன். சத்யமேவ ஜெயதே [உண்மை வெல்லும்] நமது அரசியலமைப்புச் சட்டத்திலும் அனைவரின் இல்லங்களிலும் எழுதப்பட்டுள்ளது. இன்று ராகுல் காந்திக்கு எதிரான சதி முறியடிக்கப்பட்டுள்ளது என்பது நிரூபணமாகியுள்ளது" என்றார்.