மத சுதந்திர சட்டம்


கலப்பு திருமணம் உள்ளிட்ட பல வகைகளில் மதமாற்றம் செய்யப்படுவதாக கூறி, கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மத்திய பிரதேச அரசு மத சுதந்திரச் சட்டம் சட்டம் ஒன்றை இயற்றியது. தவறான சித்தரிப்பு, கவர்ச்சி, பலாத்கார அச்சுறுத்தல், கட்டாயப்படுத்துதல், திருமணம் அல்லது வேறு எந்த மோசடி வழிமுறைகளிலும், மதமாற்றங்களை செய்வதை இச்சட்டம் தடை செய்கிறது. மேலும், மாவட்ட ஆட்சியர் ஒப்புதலின்றி திருமணம் செய்து கொள்பவர்கள் மீது வழக்கு தொடரப்படும் வகையிலும் இச்சட்டம் இயற்றப்பட்டது.


உயர் நீதிமன்றம் தடை


இதையடுத்து, மத சுதந்திர சட்டத்தின் பிரிவு 10-ன் கீழ் தங்கள் சொந்த விருப்பப்படி திருமணம் செய்து கொள்பவர்கள் மீது வழக்கு தொடர கூடாது என்று மத்திய பிரதேச மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.


இதையடுத்து, உயர்நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவை எதிர்த்து மத்திய பிரதேச அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.


மேல்முறையீட்டு மனு


இந்நிலையில், இந்த வழக்கானது, உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மத்திய பிரதேச மத சுதந்தர சட்ட சரத்துக்களுக்கு உயர்நீதிமன்றம் பிறப்பித்த விதித்த தடையை நீக்க கோரினார். சட்டவிரோத மது மாற்றங்களுக்கு திருமணம் பயன்படுத்தப்படுகிறது என்றும், இதை  பார்த்து கொண்டு "நாங்கள் கண்ணை மூடிக் கொள்ள முடியாது" என்றும் மேத்தா கூறினார்.


தடை விதிக்க மறுப்பு:


ஆனால் உச்ச நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க மறுத்துவிட்டது. இதற்கு, அனைத்து மதமாற்றங்களும் சட்டவிரோதமானவை என்று கூற முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியது. மேலும் மாவட்ட ஆட்சியருக்கு தெரிவிக்காமல் கலப்பு திருமணம் செய்து கொள்பவர்கள் மீது வழக்கு தொடர, தடை விதித்த உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மத்திய பிரதேச அரசு தாக்கல் செய்த மனுவை விசாரிக்கவும் ஒப்புக்கொண்டது.




பதிலளிக்க உத்தரவு:


மேலும், இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கை பிப்ரவரி 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.


மேலும் இச்சட்ட விதிகளை எதிர்த்து ஏழு மனுக்கள்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த சட்டத்தின் கீழ், யாரையும் வழக்கு தொடர்வதை தடுக்கும் வகையில், மனுதாரர்களுக்கு இடைக்கால நிவாரணம் கோரி மனுவில் தெரிவித்துள்ளனர்.


மனுக்களுக்கு, பதில் மனு தாக்கல் செய்ய மாநில அரசுக்கு மூன்று வார கால அவகாசம் அளித்த நீதிமன்றம், மனுதாரர்கள் 21 நாட்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறும் கூறி வழக்கை  ஒத்திவைத்தது.


Also Read: J&J License: கோவிட்-19 காலத்தில் அரசு செயல்படவில்லையா? ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் வழக்கில் நீதிமன்றம் கேள்வி…..