பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பில்கிஸ் பானு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2002-ஆம் ஆண்டு, குஜராத் கலவரத்தின்போது, தன்னை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி தனது குடும்ப உறுப்பினர்களை கொலை செய்த குற்றவாளிகளை குஜராத் அரசு முன்கூட்டியே விடுதலை செய்ததற்கு எதிராக பில்கிஸ் பானு தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது.


”நீதி வழங்கப்படுவதை பார்த்து கொண்டிருக்கக்கூடாது"


அதில், உச்சநீதிமன்றம் பல முக்கியமான கருத்துகளை தெரிவித்துள்ளது. "நீதிமன்றங்கள், நீதியை வழங்க வேண்டுமே தவிர, நீதி வழங்கப்படுவதை பார்த்து கொண்டிருக்கக்கூடாது" என வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, உஜ்ஜல் புயான் தெரிவித்துள்ளனர்.


சம்பவம் குஜராத்தில் நடந்திருந்தாலும் மகாராஷ்டிராவில்தான் விசாரணை நடத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. எனவே, மகாராஷ்டிர அரசுதான், குற்றவாளிகளின் தண்டனையை குறைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து விரிவாக பேசிய நீதிபதி நாகரத்னா, "குற்றவாளிகளுக்கு ஆதரவாக அவர்களின் தண்டனையை ரத்து செய்ய மகாராஷ்டிர அரசின் அதிகாரத்தை குஜராத் அரசு அபகரித்துள்ளது.


அதிகாரத்தை அபகரித்ததன் அடிப்படையில் தண்டனை ரத்தை ரத்து செய்கிறோம். இதில், குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை.
குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 432(7)(b)இன் கீழ், தண்டனையை ரத்து செய்ய குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை.


சட்டப் பிரிவு 432(7)(b) இல் இருந்து, சம்பவம் நடந்த அல்லது குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்ட மாநில அரசுக்கு மன்னிப்பு வழங்க அதிகாரம் இல்லை. வழக்கு விசாரணை மாற்றப்பட்டு, குற்றவாளிகள் விசாரிக்கப்பட்டு எங்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதோ, அதாவது மகாராஷ்டிர அரசிடம் மட்டுமே அதிகாரம் உள்ளது" என்றார்.


சட்டத்தின் ஆட்சியில் உணர்ச்சிகளுக்கு இடம் இல்லை..


குஜராத் அரசு, அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகக் கூறிய நீதிபதி நாகரத்னா, "குற்றவாளிகளுக்கு தண்டனை குறைக்கப்பட்டிருப்பது அதிகார துஷ்பிரயோகம் ஆகும். சட்டத்தின்படி ஒரு அரசுக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தை மற்றொரு அரசு பயன்படுத்தியுள்ளது. இது அதிகாரத்தை அபகரிக்கும் செயலாகும்" என்றார்.


அரசியலமைப்பு சட்டப்பிரிவு 142இன் கீழ் தனது அதிகாரத்தை பயன்படுத்தி குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. "இது சட்டத்தை மீறும் செயலாகும். குற்றவாளிகளை விடுதலை செய்வது நியாயம் இல்லை. சட்டத்தின் ஆட்சி என்பது ஒரு சில அதிர்ஷ்டசாலிகளின் பாதுகாப்பைக் குறிக்காது" என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


"அவர்களின் விடுதலையை ரத்து செய்துவிட்டு, அவர்களை மீண்டும் சிறைக்கு அனுப்ப வேண்டுமா? அவர்களின் சுதந்திரம் காக்கப்பட வேண்டுமா? இரக்கத்திற்கும் அனுதாபத்திற்கும் சட்டத்தின் முன் இடமில்லை. சட்டத்தின் ஆட்சியில் உணர்ச்சிகளுக்கு இடம் இல்லை. நடுநிலையாக செயல்பட வேண்டும். சட்டத்தின் ஆட்சி மீறப்பட்டால், சட்டத்தின்படி தண்டனை வழங்க களத்தில் இறங்க வேண்டும். சட்டத்தின் ஆட்சி என்பது அரசின் தன்னிச்சையான செயல்பாடுகளுக்கு எதிரானது" என்றும் நீதிபதி நாகரத்னா தெரிவித்துள்ளார்.