Attack on CJI: உச்ச நீதிமன்றத்தில் வைத்தே, தலைமை நீதிபதியை காலணியால் தாக்க முயற்சி - யார்? காரணம் தெரியுமா?
Attack On CJI: உச்சநீதிமன்றத்தில் வைத்தே நாட்டின் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது, காலணி வீச முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Attack On CJI: உச்சநீதிமன்றத்தில் வைத்தே நாட்டின் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது, காலணி வீச முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைமை நீதிபதி மீது தாக்குதல் முயற்சி:
உச்சநீதிமன்றத்தில் வைத்தே நாட்டின் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது, காலணியை வீச முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்றத்திற்குள்ளேயே வழக்கறிஞர் ஒருவர் காலணியை கையில் எடுத்து தலைமை நீதிபதி மீது வீச முயன்றுள்ளார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவலர்கள், அந்த வழக்கறிஞரை பிடித்து வெளியேற்றியதோடு, தடுப்பு காவலில் அடைத்துள்ளனர். அப்படி நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியேற்றும்போது, ”சனாதனத்தை அவமதிப்பதை பொறுத்துக்கொள்ள முடியாது என” அந்த வழக்கறிஞர் முழக்கமிட்டுள்ளார். இவர் மூத்த வழக்கறிஞர் கிஷோர் ராகேஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
An incident occurred today in the court of Chief Justice of India BR Gavai, as a lawyer tried to throw an object at him.
— ANI (@ANI) October 6, 2025
Security personnel present in court intervened and escorted the lawyer out and detained.
While being escorted out of the courtroom, he uttered “Sanatan ka… pic.twitter.com/7JdNWwvEdE
தலைமை நீதிபதி சொன்னது என்ன?
தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு வழக்கை ஒன்றை விசாரித்தபோது இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆதாரங்களின்படி, வழக்கறிஞர் மேடைக்கு அருகில் சென்று தனது காலணியை கழற்றி நீதிபதி மீது வீச முயன்றார். இருப்பினும், நீதிமன்றத்தில் இருந்த பாதுகாப்புப் பணியாளர்கள் சரியான நேரத்தில் தலையிட்டு வழக்கறிஞரை வெளியே அழைத்துச் சென்றதால் மோசமான சம்பவம் தடுக்கப்பட்டுள்ளது. அப்போது தலைமை நீதிபதி எந்தத் தயக்கமும் இல்லாமல், நீதிமன்றத்தில் இருந்த வழக்கறிஞர்களை தங்கள் வாதங்களைத் தொடருமாறு கேட்டுக் கொண்டார். மேலும், "இதற்கெல்லாம் கவனம் சிதறாதீர்கள். நாங்கள் கவனம் சிதறவில்லை. இவை என்னைப் பாதிக்காது" என்று பி.ஆர். கவாய் தெரிவித்துள்ளார்.
தாக்குதல் முயற்சிக்கு காரணம் என்ன?
கஜுராஹோவில் 7 அடி உயர விஷ்ணுவின் தலை துண்டிக்கப்பட்ட சிலையை மீட்டெடுப்பது தொடர்பான வழக்கில், தலைமை நீதிபதி கவாய் சொன்ன கருத்துக்களே இந்த சம்பவத்திற்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அந்த மனுவை தள்ளுபடி செய்யும்போது, "சென்று, உங்கள் கடவுளிடமே எதையாவது செய்யும்படி கேளுங்கள். நீங்கள் விஷ்ணுவின் தீவிர பக்தர் என்கிறீர்கள், அதனால் இப்போதே போய் பிரார்த்தனை செய்யுங்கள். அது ஒரு தொல்பொருள் தளம், எனவே இந்திய தொல்லியல்துறை உரிய அனுமதி கொடுக்க வேண்டும்" என பேசியது சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. தலைமை நீதிபதி மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக பலர் குற்றம் சாட்டினர். இரண்டு நாட்களுக்குப் பிறகு இது குறித்துப் பேசிய தலைமை நீதிபதி கவாய், தான் எந்த அவமரியாதையும் செய்யவில்லை என்று விளக்கினார். இந்நிலையில் தான், அவர் மீதான இந்த தாக்குதல் முயற்சி நடந்துள்ளது.





















