நீட் தேர்வில் மோசடி நடந்துள்ளதாக நாடு முழுவதும் பிரச்னை கிளம்பியுள்ளது. கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது, ஆள் மாறாட்டம், வினாத்தாள் கசிவு என நீட் இளநிலைத் தேர்வில் தொடர் சர்ச்சை எழுந்து வருகின்றன. இதுதொடர்பாக பிகார், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பலர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். 


இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு நடந்து வருகிறது. இந்த நிலையில், நீட் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி உச்ச நீதிமன்ற நீதிபதிகளையே குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால், அவர்கள் ஐஐடி டெல்லியின் உதவியை நாடியுள்ளனர்.


நீதிபதிகளை குழப்பிய நீட் கேள்வி: கடந்த மே மாதம் 5ஆம் தேதி நடந்த நீட் தேர்வில் இயற்பியல் பிரிவில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அணுக்களின் இயல்பு தொடர்பாக இரண்டு வாக்கியங்கள் கொடுக்கப்பட்டிருந்து. இந்த கேள்விக்கு நான்கு ஆப்ஷன்கள் தரப்பட்டிருந்தன. எது சரியானதோ அதை மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டும்.


"பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் சார்ஜ்களை சம அளவில் கொண்டிருப்பதால், அணுக்கள் எலக்ட்ரிக்கலி நியூட்ரல்" என ஒரு வாக்கத்தியத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. "ஒவ்வொரு தனிமத்தின் அணுக்களும் நிலையானவை. ஒவ்வொன்றும் தனிச்சிறப்பான ஸ்பெக்ட்ரமை வெளியிடுகின்றன" என்பது இரண்டாவது வாக்கியம். 


இரண்டாவது ஆப்ஷனை 4.2 லட்சம் மாணவர்கள் தேர்வு செய்தனர். பழைய என்சிஇஆர்டி புத்தகங்களின்படி, இதுவே சரியானது. நான்காவது ஆப்ஷனை 9.28 லட்சம் மாணவர்கள் தேர்வு செய்தனர். புதிய என்சிஇஆர்டி புத்தகங்களின்படி, இதுவே சரியானது.


உச்ச நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு: பல குளறுபடிகள் நடந்திருப்பதால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கோரி வரும் மனுதாரர்கள், இந்த கேள்வி தொடர்பாக நீதிபதிகளிடம் தெரியப்படுத்தினர். ஒரு கேள்விக்கு இரண்டு சரியான பதில்கள் இருக்க முடியாது என்றும் இரண்டு பதில்களுக்கும் முழு மதிப்பெண்ணை வழங்க கூடாது என்றும் அவர்கள் வாதிட்டனர்.


லேட்டஸ்ட் என்சிஇஆர்டி பதிப்பின்படி சரியான கேள்வியை தேர்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்ததாகவும் மனுதாரர்கள் வாதாடினர். இந்த குழப்பமான கேள்விக்கு பதில் அளித்த கருணை மதிப்பெண் வழங்கியதால் 44 மாணவர்கள் நீட் தேர்வில் முழு மதிப்பெண் எடுத்தனர்.


மனுதாரர்களின் வாதத்தை கேட்ட இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், "பழைய என்சிஇஆர்டி பதிப்பை பின்பற்ற மாட்டோம் என கூறிவிட்டு, இரண்டாவது ஆப்ஷனுக்கு மதிப்பெண் வழங்கியதன் மூலம் தங்களின் சொந்த விதிகளை நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை மீறியுள்ளது. 


ஐஐடி டெல்லியின் உதவியை நாடிய உச்ச நீதிமன்றம், "சம்பந்தப்பட்ட பாடப்பிரிவு தொடர்பாக மூன்று பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என ஐஐடி டெல்லி இயக்குநருக்கு உத்தரவிடுகிறோம். மேல் குறிப்பிட்ட கேள்விக்கு சரியான ஆப்ஷன் எது என்பதை அவர்கள் தெரிவிக்க வேண்டும். ஜூலை 23ஆம் தேதி மதியத்திற்குள் தங்கள் கருத்தை தெரிவிக்க வேண்டும்" என தெரிவித்தது.