SC Euthanasia: இந்தியாவில் செயலற்ற நிலையில் உள்ள ஒருவரை கருணைக் கொலை செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளிப்பது இதுவே முதல்முறையாகும்.
கருணைக் கொலை - நாட்டிலேயே முதல்முறையாக அனுமதி
கடந்த 13 ஆண்டுகளாக கோமாவில் உள்ள 31 வயதான ஹரிஷ் ராணா எனும் நபருக்கான, உயிர் காக்கும் சிகிச்சைகளின் ஆதரவை அகற்றி, கருணைக் கொலை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இத்தகைய தீர்ப்பு வழங்கப்படுவது நாட்டிலேயே இது முதல்முறையாகும். இதுதொடர்பான தீர்ப்பில், ”ராணாவை மருத்துவமனையில் அனுமதித்து, தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து கொடுத்து, உயிர் காக்கும் சிகிச்சை கருவிகளை அகற்ற உதவ வேண்டும், என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. செயலற்ற நிலையில் உள்ள ஒருவரை சட்டப்பூர்வமாக கருணைக் கொலை செய்ய அங்கீகரித்த 2018 உச்ச நீதிமன்ற தீர்ப்பின் பல அம்சங்களை தெளிவுபடுத்திய தீர்ப்பினை, நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கியுள்ளது.
வரலாற்றில் முக்கிய வழக்கும்.. தீர்ப்பும்..
ஹரிஷ் ராணாவின் வழக்கு தனித்துவமானது மற்றும் வரலாற்றில் முக்கியமான தீர்ப்பாகவும் அமைந்துள்ளது. அவரது உடல்நிலை மீளமுடியாதது என்று மருத்துவ அறிக்கைகள் ஒப்புக்கொண்டாலும், 2018ம் ஆண்டின் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கருணைக் கொலையை மேற்கொள்ள முடியவில்லை. காரணம் மருத்துவக் குழாய்கள் மூலம் வழங்கப்படும் உணவு மூலம் அவரது உயிர் காக்கப்பட்டு வருகிறது. பழைய வழிகாட்டுதல்களில், உணவு வழங்கும் குழாயானது உயிர் காக்கும் சிகிச்சை பிரிவில் சேர்க்கப்படவில்லை. இதன் விளைவாகவே, மருத்துவமனை மட்டத்திலேயே ராணா விவகாரத்தில் கருணைக்கொலை முடிவை மேற்கொள்ள முடியாமல் நீதிமன்றம் சென்றனர்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், “ மருத்துவ ரீதியாக நிர்வகிக்கப்படும் ஊட்டச்சத்து மற்றும் நீரேற்றம், உணவு குழாய்கள் மூலம் வழங்கப்படும் உணவு என அனைத்துமே மருத்துவ சிகிச்சையே ஆகும். அத்தகைய ஊட்டச்சத்து பரிந்துரைக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு, மருத்துவ தலையீடு மூலம் வழங்கப்படுவதால், அதைத் தொடர்வது நோயாளிக்கு பலன் இல்லை என்று மருத்துவ வாரியங்கள் முடிவு செய்தால் அவற்றை திரும்பப் பெறலாம்” என்று தெரிவித்துள்ளது. அதன்படி, ஹரிஷ் ராணாவை கருணைக் கொலை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
யார் இந்த ஹரிஷ் ராணா?
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்த ஹரிஷ் ராணா, 20 வயதாக இருந்தபோது கடந்த 2013ம் ஆண்டு நான்காவது மாடியிலிருந்து கீழே விழுந்து தலையில் படுகாயமடைந்தார். மூளையில் ஏற்பட்ட தீவிரமான காயம் காரணமாக 100 சதவிகிதம் இயங்க முடியாத நிலையில் கோமாவிற்கு சென்றார்.
தூக்கம் மற்றும் விழிப்பு போன்றவற்றை அனுபவித்தாலும், உடல் நலனில் முன்னேற்றம் ஏற்படும் அளவிற்கு அர்த்தமுள்ள அசைவுகள் எதையும் காட்டவில்லை. விபத்துக்குப் பிறகு, அறுவை சிகிச்சை மூலம் நிறுவப்பட்ட PEG உணவு குழாய் மூலம் வழங்கப்படும் ஊட்டச்சத்து மூலம் மட்டுமே ஹரிஷின் உயிர் காக்கப்பட்டு வருகிறது.
பல வருடங்களாக, ராணாவின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால், அவரது பெற்றோர், உயிர்வாழும் சிகிச்சையை திரும்பப் பெற அனுமதி கோரி நீதிமன்றத்தை அணுகினர். தங்கள் மகன் செயற்கையாக உயிருடன் வைக்கப்பட்டு வருவதாகவும், தொடர் சிகிச்சை எந்தவிதத்திலும் அவரது உடல்நிலை முன்னேற்றத்திற்கு உதவவில்லை என்றும் அவர்கள் வாதிட்டனர்.
