Supreme Court: சட்ட விதிகளை பயன்படுத்தி பணம் பறிக்கக் கூடாது என, பெண்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
உச்சநீதிமன்றம் எச்சரிக்கை:
சட்டத்தின் கடுமையான விதிகள் பெண்களின் நலனுக்காகவே தவிர, அவர்களின் கணவர்களை "கண்டிக்கவும், அச்சுறுத்தவும், ஆதிக்கம் செலுத்தவும் அல்லது மிரட்டி பணம் பறிக்கவும்" அல்ல என்று உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது. நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்து திருமணம் ஒரு புனிதமான அமைப்பு, குடும்பத்திற்கான அடித்தளம், வணிக முயற்சி அல்ல என தெரிவித்தனர்.
குறிப்பிடத்தக்க வகையில், பெரும்பாலான புகார்களில், பாலியல் தொல்லை, மிரட்டல் மற்றும் திருமணமான பெண்ணைக் கொடுமைக்கு உட்படுத்துதல் உள்ளிட்ட இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள், திருமண தகராறு தொடர்பான வழக்குகளில் "ஒருங்கிணைந்த தொகுப்பாக" குறிப்பிடப்பட்டிருப்பதை உச்ச நீதிமன்றம் பல சந்தர்ப்பங்களில் கண்டித்து இருப்பதும் நினைவுகூறத்தக்கது.
”தவறாக பயன்படுத்தப்படும் சட்டம்”
விவாகரத்து வழக்கு ஒன்றில் தீர்ப்பளித்த நீதிபதிகள், “பெண்கள் தங்கள் கைகளில் உள்ள இந்த கடுமையான சட்ட விதிகள் அவர்களின் நலனுக்கான நன்மை பயக்கும் சட்டங்கள் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். குற்றவியல் சட்டத்தில் உள்ள விதிகள் பெண்களின் பாதுகாப்பு மற்றும் அதிகாரமளிப்பதற்காக உள்ளன. ஆனால் சில நேரங்களில் சில பெண்களால் அந்த சட்டங்கள் உள்நோக்கத்துடன் தவறுதலாக பயன்படுத்தப்படுகிறது” என அறிவுறுத்தினர்.
இந்த வழக்கில் ஒரு மாதத்திற்குள் முன்னாள் மனைவிக்கு ரூ.12 கோடியை இழப்பீடாக வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேநேரம், மனைவியும் அவரது குடும்பத்தினரும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அதன் மூலம் மிரட்டி பேச்சுவார்த்தைக்கு வரவழைத்து, கணவனும் அவரது குடும்பத்தினரும் தங்கள் கோரிக்கைகளுக்கு இணங்குவதற்கான சூழலை உருவாக்குவது தொடர்பான வழக்குகள் குறித்து நீதிமன்றம் காட்டமான கருத்துகளை முன்வைத்துள்ளது.
பெண்களுக்கு நீதிபதிகள் கேள்வி:
பராமரிப்பு அல்லது ஜீவனாம்சத்திற்கான விண்ணப்பங்களில், கணவரின் சொத்துக்கள், அந்தஸ்து மற்றும் வருமானத்தை முன்னிலைப்படுத்தி, பின்னர் தங்களுக்கான இழப்பீட்டை கோருவதை அடிக்கடி காணப்படுகிறது. பொதுவாக வசதியாக உள்ள கணவர்களிடமிருந்தே விவாகரத்திற்கு பிறகு இழப்பீடு தொகை கேட்கப்படுகிறது. ஒருவேளை, சில துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகளின் காரணமாக, விவாகரத்திற்கு பிறகு, கணவர் ஏழையாக மாறினால், மனைவி தனது செல்வத்தை பகிருந்து கொள்ள விரும்புவாரா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், ஜீவனாம்சம் நிர்ணயம் செய்வது பல்வேறு காரணிகளைப் பொறுத்தது, நேரடியாக எடுத்துக் கொடுக்க முடியாது என கூறினர். தொடர்ந்து, பிரிந்து சென்ற கணவருக்கு எதிராக அவரது முன்னாள் மனைவி தொடர்ந்த குற்ற வழக்குகளையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.