இதர பிற்படுத்தப்பட்ட (ஓபிசி) சமூகத்தைச் சேர்ந்த ஒருவரின் திருமண ஊர்வலத்தின் மீது ஒரு கும்பல் கல் வீசியதில் 8 போலீசார் உட்பட பலர் காயமடைந்ததை அடுத்து, பனஸ்கந்தாவின் தீசாவில் உள்ள கும்பட் கிராமத்தில் இருந்து 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 82 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊர்வலத்தின் போது, மாப்பிள்ளை குதிரை சவாரி செய்வதை அந்த கல் வீசிய கும்பல் எதிர்த்ததாக கூறப்படுகிறது.
குதிரை சவாரி செய்ய எதிர்ப்பு
காவல்துறையின் கூற்றுப்படி, மாலை 4:30 மணியளவில் விஷ்ணுசிங் சவுகானின் திருமண ஊர்வலம் கிராமத்தில் உள்ள ஒரு கோவிலில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்பில் தொடங்கியபோது இந்த சம்பவம் நிகழ்ந்தேறி உள்ளது. "கோலி தாக்கூர் சமூகத்தை சேர்ந்த சௌஹான், ஊர்வலத்தின் போது குதிரை சவாரி ஏற்றிச் செல்வதை எதிர்த்து, தனது கிராமத்தைச் சேர்ந்த தர்பார் (சத்ரிய) சமூகத்தினர் அச்சுறுத்தியதாக கூறி போலீஸ் பாதுகாப்பு கோரினார். நிலைமையைக் கட்டுப்படுத்த மூன்று காவல் நிலையங்களில் இருந்து போலீஸாரும், DySP அலுவலகம் தீசாவின் கூடுதல் படையும் வரவழைக்கப்பட்டன. கிராமத்தின் சமூகத் தலைவர்களுடனும் நாங்கள் கலந்துரையாடினோம், ”என்று தீசா கிராமப்புற காவல் நிலையத்தின் பிஐ எம்.ஜே. சௌத்ரி கூறினார்.
கல் வீச்சு
போலீசார் கூற்றுப்படி, காவலர்கள் அங்கு நிற்கும்போதே, ஊர்வலம் துவங்கிய உடன் ஒரு 150 முதல் 200 பேர் வந்து கற்களை வீசி அடித்துள்ளனர். பெரும்பாலான கற்கள் காவல் வாகனங்களையும், காவலர்களையும் நோக்கி எறியப்பட்டுள்ளது. "கல்லெறிந்த கும்பலில் இருந்து கலுசின் சோலங்கி என்ற ஒருவர் மூங்கில் குச்சியுடன் என்னை அணுகி, மணமகனை குதிரை சவாரி செய்ய அனுமதிப்பதன் மூலம் அவர்களின் கிராமத்தின் பாரம்பரியத்தை நாங்கள் உடைக்கிறோம் என்று கூறினார்.
பின்னர் அவர் என்னை கையில் வைத்திருந்த மூங்கில் கம்பால் தாக்கினார், மேலும் பல கிராம மக்கள் எங்கள் மீது கற்களை வீசத் தொடங்கினர். கும்பலைக் கலைக்க மூன்று முறை கண்ணீர் புகை குண்டுகளை வீசினோம். மொத்தம் எட்டு போலீசார் காயமடைந்தனர் மற்றும் ஐந்து போலீஸ் வேன்கள் கும்பலால் அடித்து நொறுக்கப்பட்டன. எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது, கலுசின் சோலங்கி உட்பட மொத்தம் எழுபது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்று எம்.ஜே. சவுத்ரி கூறினார்.
காயமடைந்த போலீசார்
இதில் இன்ஸ்பெக்டர் சவுத்ரி, தந்திவாடா இன்ஸ்பெக்டர் எஸ்.ஜே.தேசாய், தீசா சர்க்கிள் இன்ஸ்பெக்டர் கே.பி.காத்வி, உதவி தலைமை காவலர்கள் சஞ்சய்தன், விக்ரம்தன், பாரத்பாய், உதவி போலீஸ் கான்ஸ்டபிள் பவேஷ் குமார், போலீஸ் கான்ஸ்டபிள் தினேஷ் குமார் பாலாஜி உள்பட 8 பேர் காயமடைந்தனர்.
வழக்குப் பதிவு
கும்பட் கிராமத்தில் குற்றம் சாட்டப்பட்ட 82 பேர் மீது கொலை முயற்சி, 120பி குற்றவியல் சதி, 332 மற்றும் 333 பேர் மீது பணியில் இருந்த அரசு ஊழியரை தாக்கியது, கலவரம் மற்றும் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பு, ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.