கடந்த 2014ஆம் ஆண்டு, பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் பாஜக ஆட்சி அமைத்ததில் இருந்து சிறும்பான்மையினர், தலித் மக்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். குறிப்பாக, அடுத்தாண்டு மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கும் மாநிலங்களில் இஸ்லாமிய மக்கள் மீது அதிக அளவில் தாக்குதல் நடத்தப்பட்டு வருவது பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது.
கிறிஸ்தவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதா?
கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஒடிசா ஆகிய மாநிலங்களில் இஸ்லாமிய மற்றும் தலித் மக்கள் மீது வன்முறையை அரங்கேற்றி அவர்களது சொத்துக்கள் சூறையாடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. மதமாற்றம் செய்கிறார்கள் என்று கூறி கிறிஸ்தவர்களின் மீதும் சமீப காலமாக தாக்குதல் தொடங்கப்பட்டுள்ளது.
தேவாலயங்களுக்கு தீ வைப்பது, கற்களை வீசி தாக்குதல் நடத்துவது, அமைதியாக நடைபெறும் பிரார்த்தனைக் கூட்டங்களில் புகுந்து மதமாற்றம் நடைபெறுகிறது எனக் கூறி பாதிரியார்கள், கிறிஸ்தவ மக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்துவது தொடர் கதையாகி வருவதாக மனித உரிமை ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கிறிஸ்தவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் அதிகரித்து வருவதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கில் மத்திய அரசு நேற்று பதில் அளித்துள்ளது. கொதிநிலையில் வைத்திருப்பதற்காகவே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டதாகவும் இது மிகைப்படுத்தப்பட்ட தவறான எண்ணத்தை தருகிறது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு முக்கிய தகவல்..!
இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வின் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசின் சார்பாக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார்.
அப்போது வாதிட்ட அவர், "குறிப்பிட்ட மத பிரிவினர் மீதான தாக்குதலை நிரூபிக்க மனுதாரர்கள் அளித்த புள்ளி விவரங்கள் தவறானவை. கிறிஸ்தவர்கள் மீது கிட்டத்தட்ட 500 தாக்குதல்கள் நடந்ததாக மனுதாரர்கள் கூறுகின்றனர். எல்லா விவரங்களையும் மாநிலங்களுக்கு அனுப்பியுள்ளோம்.
பீகார் விஷயத்தை எடுத்துக் கொள்வோம். மனுதாரர்கள் பேசும் தாக்குதல்கள் அண்டை வீட்டாருக்கு இடையே நடந்த சண்டை. அவர்களில் ஒருவர் கிறிஸ்தவராக இருந்திருக்கிறார். பின்னர், பிரச்னை தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் தவறானவை.
மனுதாரர்கள் கொடுத்த தாக்குதல் விவரங்கள் அடங்கிய பட்டியலில் 495இல் 263 சம்பவங்களில் பெரும்பாலானவை மாநில அதிகாரிகளிடம் கூட தெரிவிக்கப்படவில்லை. பதிவாகிய 232 சம்பவங்களில், 73 சம்பவங்கள் இரு தரப்புக்கும் இடையே பரஸ்பர உடன்படிக்கையுடன் சுமுகமாகத் தீர்க்கப்பட்டன.
இந்த 73 சம்பவங்கள் நிலத் தகராறு, குடும்பத் தகராறு, மூடநம்பிக்கை பழக்கவழக்கங்கள், கோவிட்-19 வழிகாட்டுதல்களை மீறுதல் மற்றும் இதர அற்பமான பிரச்சினைகளுடன் தொடர்பானவை. மீதமுள்ள 155 வழக்குகளில் எப்ஐஆர்/எப்ஐஆர் அல்லாத புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன" என்றார்.