கடந்த நவம்பர் 8 அன்று, ஜம்மு காஷ்மீரின் கோடைக்காலத் தலைநகரமான ஸ்ரீநகர் யுனெஸ்கோவின் படைப்பாற்றல் கொண்ட நகரங்களின் பட்டியலில் சர்வதேச அளவில் சேர்க்கப்பட்ட 49 நகரங்களுள் ஒன்றாகத் தேர்வாகி உள்ளது.


யுனெஸ்கோ நிறுவனத்தில் படைப்பாற்றல் கொண்ட நகரங்களின் பட்டியலில் ஏற்கனவே 246 நகரங்கள் இடம்பெற்றிருந்த நிலையில், அவற்றுடன் புதிதாக 49 நகரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த நகரங்களைத் தேர்வு செய்யும் யுனெஸ்கோ நிறுவனத்தின் தலைமை இயக்குநர் ஆட்ரே அஸோலே, இந்தப் பட்டியலில் இடம்பெற விரும்பும் நகரங்கள் தங்கள் வளர்ச்சியின் மையத்தில் தங்கள் கலாச்சாரத்தையும், படைப்பாற்றலையும் முன்வைப்பதில் தங்களை ஒப்புக்கொடுக்க வேண்டும் எனவும், தங்கள் அறிவையும், நல்ல பழக்கங்களையும் பரப்ப வேண்டும் எனவும் இந்தப் பட்டியலுக்கான தகுதிகளை வரையறை செய்கிறார். 


யுனெஸ்கோ நிறுவனம் படைப்பாற்றல் கொண்ட நகரங்களின் பட்டியலில் இதுவரை 90 நாடுகளைச் சேர்ந்த 295 நகரங்களைக் கணக்கிட்டுள்ளது. இந்த நகரங்கள் நிறைவான நகர்ப்புற வளர்ச்சிக்காகத் தங்கள் கலாச்சாரம், படைப்பாற்றல் ஆகியவற்றை முதலீடு செய்கின்றன என்று யுனெஸ்கோ நிறுவனம் கூறுகிறது. கலைகள், நாட்டுப்புறக் கலைகள், வடிவமைப்பு, சினிமா, உணவுக் கலாச்சாரம், இலக்கியம், ஊடகக் கலைகள், இசை ஆகியவை படைப்பாற்றலுக்குரியவையாகக் கருதப்படுகின்றன. 



யுனெஸ்கோ நிறுவனத்தின் தலைமை இயக்குநர் ஆட்ரே அஸோலே, `நகர்ப்புற வடிவமைப்பில் புதிய பாணியை ஒவ்வொரு நகரத்திலும் உருவாக்க வேண்டும். அதனை அந்தந்த நகரங்களைச் சேர்ந்த கட்டிட வடிவமைப்பாளர்கள், வல்லுநர்கள், மக்கள் ஆகியோர் இணைந்து உருவாக்க வேண்டும். உலகம் முழுவதும் உள்ள அரசுகளிடம், இந்தப் பட்டியலில் இடம்பெற்று யுனெஸ்கோ ஊக்குவிக்க விரும்பும் நகரங்கள் சர்வதேச அளவில் இணைந்து பணியாற்ற வசதிகள் செய்து தருமாறு கேட்டு வருகிறோம்’ என்று இந்தப் பட்டியல் குறித்து கூறியுள்ளார். 


யுனெஸ்கோவுடனான கூட்டுறவு மேம்பாட்டுக்கான இந்தியத் தேசிய ஆணையம் இந்தப் பட்டியலில் இடம்பெறுவதற்காக ஸ்ரீநகர், க்வாலியர் ஆகிய 2 நகரங்களைப் பரிந்துரைத்துள்ளது. எனினும், இதில் ஜம்மு காஷ்மீரின் கோடைக்கால தலைநகரமான ஸ்ரீநகர் மட்டுமே இடம்பெற்றுள்ளது. 



இதுகுறித்து, ஸ்ரீநகரின் மேயர் ஜுனைத் அஸிம் மட்டு ட்விட்டரில் ஸ்ரீநகர் யுனெஸ்கோ நிறுவனத்தின் படைப்பாற்றல் கொண்ட நகரங்களின் பட்டியலில் இடம்பெற்றிருப்பதை அறிவித்துள்ளார். `ஸ்ரீநகருக்கு மிக நல்ல செய்தி! ரீநகர் யுனெஸ்கோ நிறுவனத்தின் படைப்பாற்றல் கொண்ட நகரங்களின் பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து இந்தப் பட்டியலில் இணையும் ஒரே நகரம் ஸ்ரீநகர்!’ என்று தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார். 


எனினும், ஸ்ரீநகர் மேயர் கூறியதற்கு மாற்றாக, கடந்த 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், மும்பை, ஹைதராபாத் ஆகிய நகரங்கள் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.