மனிதாபிமான அடிப்படையில் மீனவர்கள் விவகாரத்தை இலங்கை அணுக வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். 


பிரதமர் மோடியுடன் இலங்கை அதிபர் திசநாயக சந்திப்பு நடத்தினார். இரு நாட்டு தலைவர்களும் ஹைதராபாத் இல்லத்தில் சந்திப்பை நடத்தினர்.  அங்கு திசாநாயக்க இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் போது உதவியதற்காக இந்தியாவுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது சுமார் 4 பில்லியன் டாலர் மதிப்புள்ள கடன் மற்றும் மானியங்கள் மூலம் இந்தியா இலங்கைக்கு ஆதரவளித்ததாக பிரதமர் மோடி கூறினார்.



மேலும் மீனவர்களின் வாழ்வாதாரம் குறித்து இலங்கை அதிபருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது மனிதாபிமான அடிப்படையில் மீனவர்கள் விவகாரத்தை இலங்கை அணுக வேண்டும் என வலியுறுத்தினார். ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கை தலைமன்னார் வரை கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் எனவும் தெரிவித்தார். 


தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக “இலங்கை படையால் மீனவர்கள் கைது செய்யப்படும் பிரச்சினைக்கு தீர்வு காண ஆர்வமுடன் காத்திருக்கிறேன். மீனவர் பிரச்சினை இரு நாடுகளுக்கு தலைவலியாகி விட்டது. தமிழ்நாடு மீனவர்கள் இரட்டை மடி வலையை பயன்படுத்துவதற்கு முடிவுகட்ட வேண்டும். இரட்டை மடி வலையை பயன்படுத்துவது மீன்பிடித் தொழிலுக்கே பேரழிவாக வந்து அமையும். மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினை குறித்தும் பிரதமர் மோடியுடன் விவாதித்தேன். இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இலங்கை நிலப்பரப்பை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்” எனத் தெரிவித்தார். 


இதனிடையே காங்கிரஸ் கட்சியின் எம்பி ராகுல்காந்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “மீன்பிடி படகுகளையும் இலங்கை படை கைப்பற்றுவதால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. டெல்லி வந்துள்ள இலங்கை அதிபரிடம் தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுத்து நிறுத்துமாறு கூறுங்கள். சிறையில் உள்ள மீனவர்களை முன் கூட்டியே விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள அபராதத்தையும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை வசம் உள்ள படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். 


இதற்கு பதில் அளித்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், “தமிழ்நாடு மீனவர்கள் கைது பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து இலங்கை அதிபருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.” என பதிலளித்துள்ளார்.