மாநிலங்களவையில், இன்று இந்திய சுற்றுலாத்துறை குரித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்ததாவது , நாட்டின் ஆன்மீக தலங்கள் உட்பட உலகளவிலான சுற்றுலா சந்தையில் இந்தியாவின் பங்கை அதிகரிப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய சுற்றுலா அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. ஒருங்கிணைந்த சந்தைப்படுத்துதல், பயண பயண வர்த்தகம், மாநில அரசுகள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களுடன் இணைந்து இதற்கான முன்னெடுப்பு எடுக்கப்பட்டு வருகிறது. தொழில்துறை வல்லுநர்கள், வர்த்தகம் சார்ந்த பங்குதாரர்களுடன் மத்திய அரசு இணைந்து சுற்றுலாத் துறையின் மேம்பாட்டிற்கான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
இதற்கென புதுப்பிக்கப்பட்டுள்ள www.incredibleindia.gov.in இணையதள சேவையை சுற்றுலா அமைச்சகம் தொடங்கியுள்ளது. இன்கிரிடிபிள் இந்தியா என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் திரைப்படங்கள், பிரசுரங்கள் மற்றும் செய்திமடல்களின் விரிவான டிஜிட்டல் களஞ்சியமும் இதில் இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் உலகெங்கிலும் உள்ள தொழில்துறை பங்குதாரர்களால் எளிதில் அணுக முடியும். சுற்றுலாப் பயணிகளை மையமாகக் கொண்டு இயங்கி வரும் இந்த இணையதளம், இந்தியாவுக்கு வருகை தரும் வெளிநாட்டு பயணிகளின் பயண அனுபவங்களை மேம்படுத்தும் வகியல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மேம்பாடு, விருந்தோம்பல் உள்ளிட்ட விளம்பரங்கள், புனித யாத்திரை புனரமைப்பு, ஆன்மீகம், சுற்றுலா உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களுக்கான மத்திய முகமைகளுக்கு உதவி செய்வது ஆகிய திட்டங்களின் கீழ் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தின் ஊரக மற்றும் நகர்ப்புறப் பகுதிகள் உட்பட மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு சுற்றுலா அமைச்சகம் நிதி உதவி அளிக்கிறது.