மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் திங்களன்று பாகிஸ்தானைத் தளமாகக் கொண்டு இயங்கி வரும் Vidly TV இன் ஸ்மார்ட் டிவி செயலியை முடக்க உத்தரவிட்டது. இதை அடுத்து அவர்களின் இரண்டு இணையதளம், இரண்டு மொபைல் அப்ளிகேஷன்கள், நான்கு சமூக ஊடக கணக்குகள் மற்றும் ஓடிடி ஆகியவற்றுக்கு இந்தியாவில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதற்காக தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021 இன் கீழ் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
தடை செய்யக் காரணம் என்ன?
அந்த ஓடிடி தளம் சமீபத்தில் "சேவக்: தி கன்ஃபெஷன்ஸ்" என்ற தலைப்பில் ஒரு வலைத் தொடரை வெளியிட்டது. “இந்த வெப்-சீரிஸ், முக்கியமான வரலாற்று நிகழ்வுகள் மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் இந்தியாவுக்கு எதிரான கதையை சித்தரித்தது, எடுத்துக்காட்டாக ஆபரேஷன் புளூ ஸ்டார் மற்றும் அதன் பின்விளைவுகள், அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு, கிரஹாம் ஸ்டெயின்ஸ் என்ற கிறிஸ்தவ மிஷனரி கொல்லப்பட்டது, மாலேகான் குண்டுவெடிப்புகள், சம்ஜௌதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்புகள், சட்லஜ் யமுனை இணைப்புக் கால்வாய் தொடர்பான மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் தகராறு போன்றவை அதில் இடம்பெற்றிருந்தன” என்று அமைச்சகம் கூறியது.
வெப் சீரிஸின் தொடக்கத்தில் இந்தியக் கொடியின் அசோக் சக்கரம் தீப்பற்றி எரிவதைக் காட்டுவதாகவும், அது இந்தியா தொடர்பான முக்கியமான வரலாற்று நிகழ்வுகள் திரிக்கப்பட்டிருப்பதை காட்சிபடுத்துவதாகவும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்தத் தொடரின் முதல் எபிசோட் நவம்பர் 26 அன்று வெளியிடப்பட்டது. அன்று 2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலின் நினைவுதினம் என்பது குறிப்பிடத்தக்கது.உத்தரவின்படி, வெப் சீரிஸ் இந்திய சமூகத்தினரிடையே வெறுப்பையும் பிரிவினையையும் விதைக்கும் நோக்கம் கொண்டதாக அமைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
"ஒரு காட்சியில், இந்துக் குழந்தைகள் முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் சீக்கியர்களை கொல்வதற்கு தயாராக வேண்டும் என்றும், அவர்களின் இருப்பால் நாடு அசுத்தமடைந்ததை அடுத்து தாய்நாட்டை சுத்தப்படுத்த வேண்டும் என்றும் ஒரு கோவில் பூசாரி பிரசங்கம் செய்கிறார்" என்கிறது அந்த அறிவிக்கை.
மற்றொரு காட்சியில் பட்டியல் சாதியினர் இந்துக்களாகவே இருக்க வேண்டியது கட்டாயம் என்று ஒரு கூற்று உள்ளது. 1984 சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தின் போது இந்துக்கள் மதச் சின்னங்களைத் தவறாகப் பயன்படுத்தி சீக்கியர்களைத் தாக்கியது நிரூபிக்கப்பட்டதாகக் காட்டுகிறது
கடந்த ஆண்டு ஜூன் மாதம், நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, டிக்டோக், வீசாட் மற்றும் ஹெலோ போன்ற பரவலாகப் பயன்படுத்தப்படும் சமூக ஊடக தளங்கள் உட்பட 59 சீன அப்ளிகேஷன்களை இந்தியா தடை செய்தது குறிப்பிடத்தக்கது.