Chandrababu Naidu: ஊழல் வழக்கில் கைதான சந்திரபாபு நாயுடுவுக்கு இரண்டு வாரங்களுக்கு காவலை நீடித்து விஜயவாடா  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சந்திரபாபு நாயுடுவுக்கு காவல் நீட்டிப்பு:


கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை, சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக பதவி வகித்தபோது, திறன் மேம்பாட்டு துறையின் நிதியை தவறுதலாக பயன்படுத்தி 300 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக அவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அம்மாநில அரசியலில் புதிய புயலை கிளப்பியுள்ளது. 


தனக்கு எதிராக பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு வழக்கு தொடர்ந்தார். ஆனால், சந்திரபாபு நாயுடுவின் மனுவை அம்மாநில உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, விஜயவாடா ஊழல் தடுப்பு நீதிமன்றம் அவரின் காவலை மேலும் 2 நாள்களுக்கு நீட்டித்தது. சிறையில் உள்ள சந்திரபாபு நாயுடுவிடம் கடந்த இரண்டு நாள்களாக சிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வந்தனர். இன்றுடன் அந்த காவல் நிறைவடைந்துள்ள நிலையில், அதனை வரும் அக்டோபர் 19ஆம் தேதி வரை நீட்டித்து விஜயவாடா ஊழல் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


மூன்று முறை காவல் நீட்டிப்பு:


ராஜமுந்திரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், காணொளி காட்சி வாயிலாக நீதிபதி முன் ஆஜரானார். விசாரணையின்போது அவரின் உடல்நிலை குறித்து நீதிபதி ஹிமா பிந்து விசாரித்தார். மேலும் விசாரணைக்காக நாயுடுவின் காவலை நீட்டிக்குமாறு சிஐடி நீதிமன்றத்தில் கோரியது. மனு தாக்கல் செய்யும்படி நீதிபதி கேட்டுக் கொண்டார். இதைத்தொடர்ந்து, அவரின் காவலை இரண்டு வாரங்களுக்கு (அக்டோபர் 19)  நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். 


இதனால், சந்திரபாபு நாயுடுவின் காவல் நீட்டிக்கப்படுவது இது மூன்றாவது முறையாகும். முன்னதாக, கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி கைதான சந்திரபாபு நாயுடுவின் காவலை, வரும் செப்டம்பர் 22ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதனை அடுத்து, செட்பம்பர் 24ஆம் தேதி முதல் அக்டோபர் 5ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.  இப்படியே, தொடந்து சிறைவாசம் அனுபவித்து வருகிறார் சந்திரபாபு நாயுடு. ஊழல் வழக்கில் கைதான சந்திரபாபு நாயுடு சட்டப் போராட்டத்தில் தொடர் பின்னடைவுகளை சந்தித்து வருகிறார். 


உச்சநீதிமன்றத்தை நாடிய சந்திரபாபு நாயுடு:


ஆந்திர உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சந்திரபாபு நாயுடு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை அனிருத்தா போஸ் மற்றும் பேலா எம் திரிவேதி ஆகியோர் கொண்ட அமர்வி விசாரித்து வருகிறது. கடந்த 3ம் தேதி அவசர வழக்காக விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட அனைத்து ஆவணங்களையும் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு முகுல் ரோஹித்கியை நீதிபதிகள் கேட்டு கொண்டனர்.


பின்னர், சந்திரபாபு நாயுடுவின் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் ஹரிஷ் சால்வே, அபிஷேக் சிங்வி மற்றும் சித்தார்த் லுத்ரா, "இது ஒரு அரசியல் வழக்கு தவிர வேறொன்றும் இல்லை. 17A பிரிவின் கடுமையான விதிகள் இந்த விஷயத்தில் பொருந்தும். எப்ஐஆருக்கு மேல் எப்ஐஆராக பதிவு செய்து வருகிறார்கள். ஆட்சி மாற்றத்தால் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வரும் 9ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.  1988 ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சந்திரபாபு  நாயுடு மீது ஏசிபி 120(பி), 166, 167, 418, 420, 465, 468, 201, 109, 34 மற்றும் 37 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.