தெலங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகர ராவ், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். விலைவாசி உயர்வு, கூட்டாட்சி போன்ற விவகாரங்களை முன்வைத்து சந்திரசேகர ராவின் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி, பாஜகவை கடுமையாக சாடி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, தெலங்கானாவில் உள்ள ரேஷன் கடை, மத்திய அரசுக்கும் சந்திரசேகர ராவு அரசுக்கும் இடையேயான புதிய அரசியல் களமாக மாறியுள்ளது.
பாஜகவின் “லோக்சபா பிரவாஸ் யோஜனா” திட்டத்தின் ஒரு பகுதியாக, அடுத்தாண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ள தெலங்கானாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெள்ளிக்கிழமை பிர்கூரில் உள்ள ஒரு ரேஷன் கடைக்கு சென்றுள்ளார். அங்கு, "மோடி படம் இல்லாதது" அவரின் கவனத்துக்கு வந்துள்ளது.
கண்கூடாக எரிச்சலடைந்த நிர்மலா சீதாராமன், ரேஷன் கடைகளில் மோடியின் படத்தை ஏன் வைக்கவில்லை என அங்கு கூடியிருந்த பயனாளிகள் முன்பே கேட்டுள்ளார். அப்போது, பொதுமக்களிடம் பேசிய அவர், "வெளிச்சந்தையில் ஒரு கிலோ அரிசி ரூ. 35க்கு விற்கப்படுகிறது. ஆனால் அது உங்களுக்கு ரூ. 1க்கு வழங்கப்படுகிறது. இதற்காக, மத்திய அரசு தோராயமாக ரூ. 30 செலவு செய்யும் நிலையில், மாநில அரசு ரூ. 4 மட்டுமே வழங்குகிறது.
கோவிட்-19 தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து, மோடி அரசாங்கம் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் ஐந்து கிலோ அரிசியை இலவசமாக வழங்கி வருகிறது. அனைத்து தளவாட, சேமிப்பு செலவுகள் ஆகியவற்றை மத்திய அரசு ஏற்று வருகிறது. பெரிய தலைவரின் (பிரதமர் மோடி) படத்தை தெலங்கானாவில் வைப்பதற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்?" என கேள்வி எழுப்பியுள்ளார்.
ரேஷன் கடைகளில் மோடியின் படங்களை சந்திரசேகர ராவ் அரசு நிராகரிப்பதாகவும், பிரதமரின் ஃபிளக்ஸ்கள் வைக்கப்படும் போது அது கிழிக்கப்பட்டு சேதப்படுத்தப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். உடனடியாக அவருடன் வந்திருந்த காமரெட்டி மாவட்ட ஆட்சியர் ஜிதேஷ் பாட்டீலுக்கு, கடைகளில் பிரதமரின் படங்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு உத்தரவிட்டார்.
“இன்று பிரதமர் மோடியின் படத்தை எங்கள் மக்கள் இங்கு நிறுவுவார்கள். எந்த வகையிலும் படத்தை அகற்றவோ, கிழிக்கவோ, பாதிக்கப்படவோ கூடாது என்பதை மாவட்ட நிர்வாகியாக நீங்கள் உறுதி செய்ய வேண்டும்” என்று நிர்மலா சீதாராமன் மாவட்ட ஆட்சியரிடம் அறிவுறுத்தினார்.
முன்னதாக, மக்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் அரிசியில் மத்திய, மாநில அரசின் பங்கின் விவரங்களை கூறுமாறு நிர்மலா சீதாராமன் மாவட்ட ஆட்சியரிடம் வினவினார். அப்போது, விவரத்தின் கணக்கை வழங்க முயற்சித்தபோது தடுமாறியதற்காக மாவட்ட ஆட்சியர், அமைச்சரின் கோபத்திற்கு உள்ளானார்.