மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார். உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். 


இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்:


முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் சீதாராம் யெச்சூரி. இவருக்கு வயது 72. கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி நிமோமியா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியான மருத்துவ அறிக்கையில், அவர் சுவாசப் பிரச்சினைக்காக சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது. 


அவரது உடல்நிலையை பலதரப்பட்ட மருத்துவர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வந்தனர். இதையடுத்து, அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டர்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.


தலைவர்கள் இரங்கல்:


சீதாராம் யெச்சூரி, விரைவில் குணமாக வேண்டும் என அரசியல் தலைவர்கள் தொடங்கி பல்வேறு தரப்பினர் வேண்டி வந்தனர். இந்த சூழலில், இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. சீதாராம் யெச்சூரியின் இறப்பு செய்திக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


 






சென்னையில் தெலுங்கு பேசும் குடும்பத்தில் பிறந்தவர் சீதாராம் யெச்சூரி. இவரது பெற்றோர் ஆந்திராவை சேர்ந்தவர்கள். மாணவ பருவத்தில் இருந்தே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்து வரும் சீதாராம் யெச்சூரி,  மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து பல முறை மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக தொடர்ந்து மூன்று முறை தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதையும் படிக்க: ஆஹா! சாலை வசதி இல்லாத கிராமங்களில் புதிய சாலைகள்.. வருகிறது சூப்பர் திட்டம்!