உத்தவ் தாக்கரேவுக்கு தீபச் சுடர் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது
தற்காலிக சின்னம் மற்றும் கட்சி பெயர் கோரி, தேர்தல் ஆணையத்திடம் உத்தவ் தாக்கரே மனுதாக்கல் செய்திருந்த நிலையில் தீப சுடர் சின்னத்தையும் , ’சிவ சேனா உத்தவ் பாலாசாகேப் தாக்கரே’ என்ற கட்சி பெயரையும் இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.
என்ன பிரச்னை:
சிவசேனா கட்சித் தலைமைக்கு எதிராக அக்கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கிய நிலையில், மகா விளாஸ் கூட்டணி முறிந்தது.
அதை தொடர்ந்து பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஷிண்டே முதலமைச்சரானதைத் தொடர்ந்து, முதன்முறையாக மக்கள் மன்றத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவை ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவை எதிர்கொள்கிறது. இந்நிலையில், எம்எல்ஏ ரமேஷ் லட்கேவின் மறைவை தொடர்ந்து, நவம்பர் 3ஆம் தேதி அந்தேரி கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
ஆளும் பாஜகவும், ஷிண்டே பிரிவினரும் மும்பை மாநகராட்சியின் முன்னாள் கவுன்சிலரான முர்ஜி படேலை இடைத்தேர்தலில் நிறுத்தியுள்ளனர். உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி மறைந்த லட்கேவின் மனைவி ருதுஜா லட்கேவை களமிறக்க வாய்ப்புள்ளது.
சின்னம் முடக்கம்:
இந்ந்லையில் இரு தரப்பும் சிவசேனா கட்சியின் வில் அம்பு சின்னத்தை உரிமை கோரிய நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையம் சின்னத்தை முடக்கியது. அந்தேரி (கிழக்கு) தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில், உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே இரு தரப்பு ஆதரவாளர்களும் வில் - அம்பு சின்னத்தை பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் இரண்டு தரப்பினருக்கும் வெவ்வேறு சின்னங்கள் ஒதுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
புது சின்னங்கள் ஒதுக்கீடு:
இந்நிலையில், புதிய சின்னம் மற்றும் பெயர் ஒதுக்க உத்தவ் தாக்கரே, தேர்தல் ஆணையத்திடம் கோரியிருந்தார்.
இதையடுத்து, உத்தவ் தாக்கரேவுக்கு ”தீப சுடர்” சின்னத்தையும், ”சிவ சேனா உத்தவ் பாலாசாகேப் தாக்கரே” என்ற கட்சி பெயரையும் இந்திய தேர்தல் ஆணையம் இன்று (அக்-10) ஒதுக்கியது.
இந்நிலையில், ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு பாலாசாகேப் ”சிவசேனா” என்ற கட்சி பெயரை இந்திய தேர்தல் ஆணையம் இன்று (அக்-10) ஒதுக்கியது.