அரசியலில் மற்ற கட்சி தலைவர்களை பாராட்டுவது அரிதிலும் அரிதாகிவிட்ட நிலையில், பில்கின் பானோ வழக்கு குற்றவாளிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதை விமர்சித்து நடிகை குஷ்பு சுந்தர் ட்வீட் செய்ததற்கு காங்கிரஸ் எம்பி சசி தரூர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
பில்கிஸ் பானோ கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனையை எதிர்கொண்டிருந்த 11 குற்றவாளிகளையும் குஜராத் அரசு இந்த மாத தொடக்கத்தில் முன்கூட்டியே விடுதலை செய்தது. எதிர்க்கட்சிகளால் பரவலாகக் கண்டிக்கப்பட்ட இந்த நடவடிக்கையை விமர்சித்த நடிகை குஷ்பு, இதுபோன்ற சம்பவங்கள் "மனிதகுலம் மற்றும் பெண்மைக்கு அவமானம்" என்று கூறினார்.
பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினராக உள்ள குஷ்புவை புகழ்ந்த சசி தரூர், வலதுசாரிக்கு ஆதரவாக இருப்பதை விட சரியான விஷயத்திற்காக குஷ்பு நிற்பதைக் கண்டு பெருமிதம் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சசி தரூர் தனது ட்விட்டர் பக்கத்தில், "குஷ்பு, நீங்கள் வலது சாரியை விட சரியான விஷயத்திற்காக நிற்பதைக் கண்டு பெருமிதம் கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, பில்கிஸ் பானோ வழக்கு குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்த குஷ்பு, "பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி, கொடூரமாக தாக்கப்பட்டு, மனரீதியாக பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும். இதில் ஈடுபட்ட எந்த எவரும் விடுதலையாகக்கூடாது.
அப்படிச் செய்தால் அது மனித குலத்திற்கும், பெண்ணுக்கும் அவமானம். பில்கிஸ்பானோ அல்லது எந்தவொரு பெண்ணுக்கும் அரசியல் மற்றும் சித்தாந்தங்களுக்கு அப்பாற்பட்டு ஆதரவு தேவை" எனக் குறிப்பிட்டிருந்தார்.