கடந்த 2014ஆம் ஆண்டுக்கு பிறகு, இந்திய அரசியலில் பாஜக ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், அதை முடிவுக்கு கொண்டு வர காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முயன்று வருகிறது. 2019ஆம் ஆண்டில், இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அது பெரிதாக பலன் தரவில்லை.
ஆனால், இந்த முறை அதை சாத்தியப்படுத்த திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்துள்ளது. எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் முதல்படியாக பிகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.
பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிய எதிர்க்கட்சிகளின் கூட்டம்:
இதை தொடர்ந்து, பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இரண்டாவது கூட்டம் இன்றும் நாளையும் பெங்களூருவில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க 24 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாட்னாவில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொள்ளாத காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி, பெங்களூரு கூட்டத்தில் பங்கேற்கிறார்.
இதற்கிடையே, எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் விதமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது. எதிர்க்கட்சிகளின் முதல்நாள் கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் கலந்து கொள்ள மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவரின் கட்சி பிளவுப்பட்டுள்ள நிலையில், முதல் நாள் கூட்டத்தை சரத் பவார் தவிர்த்திருப்பது பல்வேறு கேள்விகளுக்கு வழிவகுத்துள்ளது.
தேசிய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்திய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பிளவு:
மகாராஷ்டிர அரசியலில் உச்சக்கட்ட திருப்பமாக, எதிர்க்கட்சியாக இருந்த தேசியவாத காங்கிரஸ், அக்கட்சியின் தேசிய தலைவர் சரத் பவாரின் ஒப்புதலின்றி, சமீபத்தில் ஆளும் பாஜக - சிவசேனா கூட்டணி அரசாங்கத்தில் இணைந்தது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அஜித் பவார் துணை முதலமைச்சராக பொறுப்பேற்று கொண்டார். அவருடன், அக்கட்சியை சேர்ந்த 8 மூத்த தலைவர்கள், அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர்.
இதன் காரணமாக, சரத் பவாருக்கும் கட்சியின் மூத்த தலைவரும் அவருடைய அண்ணன் மகனுமான அஜித் பவாருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதில் மற்றுமொரு திருப்பமாக, அஜித் பவார், பிரபுல் படேல் உள்ளிட்ட அதிருப்தி தலைவர்கள், சரத் பவாரை சந்தித்து நேற்று பேசினர்.
முதல் நாள் கூட்டத்தை தவிர்த்த சரத் பவார்:
இப்படிப்பட்ட சூழலில், எதிர்க்கட்சிகளின் இன்றைய கூட்டத்தில் சரத் பவார் கலந்து கொள்ள மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நாளை நடைபெறும் கூட்டத்தில் சரத் பவாரும், அவரது மகளும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்ரியா சுலே கலந்து கொள்வார்கள் என கட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பாட்னாவில் நடைபெற்ற கூட்டத்தில் சரத் பவார் கலந்து கொண்டது மட்டும் இன்றி, நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறார். இரண்டாம் நாள் கூட்டத்தில் சரத் பவார் பங்கேற்பதை உறுதி செய்த சிவசேனா உத்தவ் தாக்கரே பிரிவு மூத்த தலைவர் சஞ்சய் ராவத், "பாட்னா கூட்டத்திற்கு பிறகு, இன்று நடைபெறும் பெங்களூரு கூட்டம் தீர்க்கமாக இருக்கும்.
இந்த கூட்டத்தில் சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே கலந்து கொள்கிறார். இந்த கூட்டத்தில் சரத் பவார் பங்கேற்பாரா இல்லையா என்பதில் குழப்பம் நிலவியது. நாளை காலை பெங்களூருவில் நடைபெறும் கூட்டத்தில் பவார் கலந்து கொள்கிறார். இதை நான் உறுதியாகச் சொல்கிறேன். நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம்" என்றார்.