பிரதமர் மோடியின் அரசியல் வருகை குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கேலியாக விமர்சித்து பதிலளித்துள்ளார்.
ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா- பாஜக கூட்டணி அரசின் செயல்பாடுகளை மகாராஷ்டிரா எதிர்க்கட்சி தலைவர்கள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். இச்சூழலில் முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் சரத் பவார், ஆளும் பாஜகவையும் பிரதமர் நரேந்திர மோடியையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி முன்பு ஒரு முறை சரத் பவாரின் வழிகாட்டுதலின்படியே தான் அரசியலுக்கு வந்ததாகவும், அவரது கையைப் பிடித்தே தான் அரசியலுக்கு வந்ததாகவும் கூறி இருந்தார். இந்நிலையில் மோடியின் இந்தக் கூற்றை நினைவுகூர்ந்து முன்னதாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்த சரத் பவார், "அது இவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என ஒரு போதும் நான் நினைக்கவில்லை" என பதில் அளித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் கடந்த 2.5 ஆண்டுகளாக சிவசேனா- என்சிபி- காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்தது. தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டே ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கவே இந்தக் கூட்டணியின் ஆட்சி முன்னதாக முடிவுக்கு வந்தது.
தற்போது மகாராஷ்டிராவில் ஷிண்டே தலைமையிலான சிவசேனா மற்றும் பாஜக ஆட்சியில் உள்ள நிலையில் சரத் பவார் உள்பட எதிர்க்கட்சியினர் இவர்களை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
81 வயதாகும் சரத் பவார், அடுத்து வரும் 2024 மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படலாம் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பான கேள்விக்கும் பதில் அளித்த சரத் பவார், "இந்த வயதில் எந்தப் பொறுப்பையும் ஏற்க விரும்பவில்லை. பாஜகவுக்கு எதிராக அனைத்து கட்சிகளை ஒன்றிணைக்க மட்டுமே நான் உதவுவேன்.
2014ஆம் ஆண்டு பாஜக பல்வேறு வாக்குறுதிகளை முன்வைத்து அரசியலுக்கு வந்தனர். ஆனால் அவர்கள் எந்தவொரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. கிராமங்களுக்கு நல்ல காலம் வந்துவிட்டதாகக் கூறினார்கள், இணையம் மூலம் கிராமங்களை இணைப்பது, கழிப்பறைகள், குடிநீர் வழங்குதல், அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் என அவர்கள் முன்வைத்த எந்தவொரு வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.
சிறிய கட்சிகள் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதே அவர்களது நோக்கம். சிபிஐ போன்ற மத்திய அரசு நிறுவனங்கள் மூலம் இதனை செய்ய முயற்சிக்கிறார்கள். எதிர்க்கட்சிகளுக்கு எதிராக மத்திய அரசு நிறுவனங்களைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்துவதன் மூலம் அவர்கள் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீதே தாக்குதல் நடத்துகின்றனர். பாஜக அல்லாத அனைத்து மாநிலங்களிலும், சட்டப்பேரவை உறுப்பினர்களைப் பிரித்து ஆட்சியைப் பிடிக்க பாஜக முயல்கிறது. அதற்கு சமீபத்திய உதாரணம் தான் மகாராஷ்டிரா" எனக் காட்டமாகக் கூறியுள்ளார்.
மத்தியப் பிரதேசம், கர்நாடகா என பல்வேறு மாநிலங்களிலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்எல்ஏக்களே பாஜகவில் இணைந்தனர். இதனால் அங்கெல்லாம் ஆட்சி கவிழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
Chinese Spy Ship: இலங்கையில் சீன ‘உளவு’ கப்பல்.. இந்தியாவின் ப்ளான் என்ன? நிலைமையைச் சொன்ன அமைச்சர் ஜெய்சங்கர்!