‘இது ரொம்ப தப்பு’ - ஷாருக்கான், அஜய் தேவ்கன், டைகர் ஷெராஃப்புக்கு நோட்டீஸ்!
பான் மசாலா விளம்பரம் தொடர்பாக ஷாருக்கான், அஜய் தேவ்கன், டைகர் ஷெராஃப் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

பான் மசாலா விளம்பரம் தொடர்பாக ஷாருக்கான், அஜய் தேவ்கன், டைகர் ஷெராஃப் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூரில் உள்ள நுகர்வோர் தகராறு தீர்வு ஆணையம், பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், அஜய் தேவ்கன் மற்றும் டைகர் ஷெராஃப் ஆகியோருக்கு பான் மசாலா விளம்பரம் தவறாக வழிநடத்துவதாகக் கூறி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மாவட்ட நுகர்வோர் தகராறு தீர்வு ஆணையம், விமல் பான் மசாலாவை தயாரிக்கும் ஜேபி இண்டஸ்ட்ரீஸின் தலைவர் விமல் குமார் அகர்வாலுக்கும் இதேபோன்ற அறிவிப்பை அனுப்பி, மார்ச் 19 அன்று அனைத்து தரப்பினரும் ஆணையம் முன்பு ஆஜராகுமாறு உத்தரவிட்டது.
கமிஷன் தலைவர் கியார்சிலால் மீனா மற்றும் உறுப்பினர் ஹேமலதா அகர்வால் ஆகியோர் வெளியிட்ட அறிவிப்பில், “விசாரணை தேதி காலை 10 மணிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நீங்கள் நேரிலோ அல்லது உங்கள் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி மூலமாகவோ ஆஜராக வேண்டும்” எனத் தெரிவிட்துள்ளனர்.
மேலும், அனைத்து நடிகர்களும், பான் மசாலா தயாரிப்பு நிறுவனமும் நோட்டீஸ் பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் தங்கள் பதில்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஆணையம் உத்தரவிட்டது.
நடிகர்களிடமிருந்தோ அல்லது நிறுவனத்திடமிருந்தோ உடனடி கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
ஜெய்ப்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் யோகேந்திர சிங் பதியால் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த விளம்பரத்தில் "இந்த பான் மசாலாவின் ஒவ்வொரு தானியமும் குங்குமப்பூவின் சக்தியைக் கொண்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
மேலும், “இதன் காரணமாக, ஜேபி இண்டஸ்ட்ரீஸ் கோடிக்கணக்கான ரூபாய்களை சம்பாதித்து வருகிறது, மேலும் பொது மக்கள் தொடர்ந்து பான் மசாலாவை உட்கொள்கிறார்கள், இது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களை உண்டாக்குகிறது. குங்குமப்பூ கலந்த குட்கா என்ற பெயரில் விமல் பான் மசாலாவை வாங்க பொதுமக்கள் ஈர்க்கப்படுகின்றனர். குங்குமப்பூவின் பெயரில் பொது மக்கள் குழப்பமடைகிறார்கள், அதே நேரத்தில் அந்த தயாரிப்பில் குங்குமப்பூ போன்ற எந்த பொருளின் கலவையும் இல்லை. சந்தையில் குங்குமப்பூவின் விலை ஒரு கிலோ ரூ.4 லட்சம், பான் மசாலாவின் விலை ரூ.5 மட்டுமே. அப்புறம் எப்படி குங்குமப்பூவை கலக்க முடியும்.
தவறான தகவல்களைப் பரப்பி, பொது மக்களை ஏமாற்றியதற்காக தயாரிப்பு நிறுவனம் மற்றும் விளம்பரத்தில் ஈடுபட்ட நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த தவறான பிரச்சாரத்தால் பொதுமக்கள் உடல் நல பாதிப்புகளை சந்திக்கின்றனர். இதற்கு தயாரிப்பு நிறுவனம் மற்றும் நடிகர்கள் மறைமுகமாக பொறுப்பாவார்கள். அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும். விளம்பரம் மற்றும் பான் மசாலாவை தடை செய்ய வேண்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.