'நோ மீன்ஸ் நோ' என்று நீதிமன்றக் காட்சியில் அஜித் பேச கைதட்டல்கள் பறந்தன. ஒரு பெண் 'நோ' என்றால் அவரை எந்த விதத்திலும் பாலியல் ரீதியாக அணுகக் கூடாது என்பதே அந்தக்காட்சி கூறிய கருத்து. அதுவும், அது உங்கள் மனைவியாக இருந்தாலும் 'வேண்டாம் என்றால் வேண்டாம்' தான். அதற்கு மேல் வற்புறுத்த உங்களுக்கு உரிமை இல்லை என அழுத்தமாக பதிவு செய்யும் 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம். ரீலில் கைதட்டல்கள் வாங்கிய அந்தக் கருத்து ரியலில் இருக்கிறதா? என்பதற்கு பதில் கூறியுள்ளது சத்தீஸ்கர் சம்பவம்.
சத்தீஸ்கர் நீதிமன்றத்தில் பெண் ஒருவர் தன்னுடைய கணவருக்கு எதிராகவே பாலியல் வன்கொடுமை வழக்கை பதிவு செய்திருந்தார். அதன் சாராம்சம் என்னவென்றால் விருப்பத்துக்கு மாறாக கட்டாயப்படுத்தி தன்னிடம் உடலுறவு கொள்ளும் கணவன் மீது மனைவி புகாரளித்துள்ளார். அந்த புகாரில் திருமணத்துக்கு பிறகு வரதட்சணை கொடுமையால் பாதிக்கப்பட்டேன். அதன் ஒரு பகுதியாக, என் கணவர் என்னை, பாலியல் ரீதியாக துன்புறுத்த தொடங்கினார். இயற்கைக்கு மாறாக என்னைக் கட்டாயப்படுத்தி உடலுறவு மேற்கொண்டார். சில கொடூர பாலியல் சீண்டலிலும் என்னை உட்படுத்தினார் எனவும் குறிப்பிட்டுள்ளார். அதனால் இந்த வழக்கை பாலியல் வழக்கு என தொடுத்துள்ளார் அப்பெண். இந்த வழக்கு சத்தீஸ்கர் மாநிலம் உயர் நீதிமன்ற நீதிபதி சந்திரவான்ஷி முன்பு விசாரணை வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, ''ஒரு ஆண் 18 வயது பூர்த்தி அடைந்த தன்னுடைய சொந்த மனைவியிடம் வற்புறுத்தி உடலுறவில் ஈடுபட்டாலும் அது பாலியல் வன்கொடுமை அல்ல'' எனத் தெரிவித்துள்ளார். அதேசமயம் வற்புறுத்தி இயற்கைக்கு மாறாக பாலியல் வன்கொடுமை செய்வது குற்றம் தான். அதனால் குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது சட்டப்பிரிவு 377 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். அதாவது இயற்கைக்கு மாறாக பாலியலில் ஈடுபட்டு திருப்தியடைவது பிரிவு 377ன் கீழ் குற்றம் தான். அதனால் குற்றச்சாட்ட நபர் மீது அந்த அந்த குறிப்பிட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இது வரதட்சணை சார்ந்த புகார் என்பதால் குற்றம் சாட்டப்பட்ட நபர் மீதும் அவரின் உறவினர்கள் மீதும் 498(ஏ), 34,376 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் இதே மாதிரியான வழக்கு ஒன்று கேரளாவில் அரங்கேறியது. ஒரு பெண் ஒருவர் த கணவன் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் விருப்பமே இல்லாமல் தன் கணவர் கட்டாயப்படுத்தி உடலுறவு கொள்வதாக குறிப்பிட்டார். அதற்கு தீர்ப்பு தெரிவித்த நீதிமன்றம், விருப்பமில்லாமல் கட்டாயப்படுத்தி மனைவியிடம் உடலுறவு கொள்வதும் ஒரு வகையில் பாலியல் வன்கொடுமையே. ஆனால் அப்படி ஈடுபடும் கணவன் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமில்லை. வேண்டுமென்றால் மனைவி குறிப்பிட்ட காரணத்தை சுட்டிக்காட்டி விவாகரத்து கோரலாம் எனத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.