Transgender Toilet: மாற்றுத் திறனாளிகளுக்காக கட்டப்பட்டுள்ள 500க்கும் மேற்பட்ட கழிப்பறைகளை திருநர்கள் பயன்படுத்தலாம் என டெல்லி உயர்நீதி மன்றம் தெரிவித்துள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான 505 கழிப்பறைகள் மாற்றுத்திறனாளிகளின் பயன்பாட்டிற்காக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், திருநர்களுக்கென தனி கழிப்பறைகள் விரைவாக உருவாக்கப்படும் என்றும் தில்லி உயர் நீதிமன்றத்தில் டெல்லிஅரசு தெரிவித்துள்ளது. திருநர்களின் பயன்பாட்டிற்காக ஏற்கனவே ஒன்பது புதிய கழிவறைகள் கட்டப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்காக மேலும் 56 கழிவறைகள் கட்டும் பணி நடைபெற்று வருவதாகவும் மாநில அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு, திருநர்களுக்காக கட்டப்பட்டுள்ள புதிய கழிவறைகள் குறித்து நீதிமன்றத்திற்கு அறிக்கை தாக்கல் செய்ய டெல்லி அரசுக்கு 6 வார கால அவகாசம் அளித்துள்ளது. மேலும், இந்த வழக்கை நவம்பர் 14-ம் தேதிக்கு விசாரணைக்கு ஒத்திவைத்துள்ளது.
திருநர்களுக்குத் தனி பொதுக் கழிப்பறைகள் இல்லாததால் அவர்கள் பாலியல் வன்கொடுமை மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர் என்று மாற்று பாலினத்தவருக்கு தனி கழிவறைகள் கட்ட உத்தரவிடக்கோரி, முன்னாள் சட்டக்கல்லூரி மாணவி ஜாஸ்மின் கவுர் சாப்ரா தாக்கல் செய்த பொதுநல மனுவை நீதிமன்றம் விசாரித்தது. மாற்று பாலினத்தவர்களுக்கென தனித்தனி கழிப்பறைகள் இல்லாதது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு எதிரானது என்றும், மத்திய அரசின் நிதி இருந்தும், தில்லியில் திருநர்களுக்கென தனி கழிப்பறைகள் அமைக்கப்படவில்லை என்றும் மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கின் விசாரணையின் போது, டெல்லி அரசு, சமர்ப்பித்த நடவடிக்கை அறிக்கையின்படி, மாற்றுத்திறனாளிகளுக்காக மொத்தம் 505 கழிப்பறைகள் திருநர்களின் பயன்பாட்டிற்காக நியமிக்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கான தனி அடையாளம் இடப்பட்டுள்ள பொதுக் கழிப்பறை வசதிகளை உருவாக்குவது தொடர்பாக, தற்போது ஒன்பது புதிய கழிப்பறைகள் கட்டப்பட்டு வருவதாகவும், 56 கழிப்பறைகள் செயல்பாட்டில் உள்ளதாகவும், 6 இன்னும் தொடங்கப்படாமல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. திருநர்களுக்கான தனி கழிப்பறைகள் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் மாநில அரசு தெரிவித்துள்ளது.
புதிய பொது இடங்கள் எங்கு உருவாக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் திருநர்களுக்கு தனி கழிப்பறைகள் இருக்க வேண்டும் என்று டெல்லி அரசுக்கு உயர்நீதிமன்றம் முன்பு கூறியதுடன், இந்த உத்தரவை கவனமாக பின்பற்றுமாறு உத்தரவிட்டது. மேலும், டெல்லி மாநில அரசு, உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு சிறிது கால அவகாசம் தேவை என்றும், திருநர்கள், மாற்றுத்திறனாளிகளுக்காக கட்டப்பட்டுள்ள கழிப்பறைகளை இப்போதைக்கு பயன்படுத்தலாம் என்றும் டெல்லி அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், தற்போதைய பிரச்னை நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளதாகவும், கழிவறை கட்ட அரசு 2 ஆண்டுகள் காலக்கெடு விதித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மைசூர், போபால் மற்றும் லூதியானா ஆகிய நகரங்களில் ஏற்கனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளன, மேலும் திருநர்களுக்கென தனி பொது கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன, ஆனால் தேசிய தலைநகரான டெல்லியில் இன்னும் அத்தகைய முயற்சியை எங்கும் எடுக்கவில்லை என்றும் மனுதாரர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், "திருநர்களுக்கு தனி கழிப்பறை வசதிகள் இல்லை, இதனால் அவர்கள் பாலியல் வன்கொடுமை மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளாகக்கூடிய ஆண் கழிப்பறைகளைப் பயன்படுத்த நிர்பந்திக்கப்படுகிறார்கள். பாலியல் நோக்குநிலை அல்லது பாலின அடையாளத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவது, சட்டத்தின் முன் சமத்துவத்தையும் சட்டத்தின் சம பாதுகாப்பையும் பாதிக்கிறது. மற்றும் அரசியலமைப்பின் 14 வது பிரிவை மீறுகிறது" என்று வழக்கறிஞர் ருபிந்தர் பால் சிங் மூலம் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ளது. ஆண்கள், பெண்களிக்காக தயாரிக்கப்பட்ட கழிவறைகளை கழிவறைகளை திருநர்கள் பயன்படுத்தும்போது அசௌகரியமாகவும் பயன்படுத்த தயங்குவதாகும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
திருநர்கள், மாற்றுத்திறனாளிகளுக்காக கட்டப்பட்டுள்ள கழிப்பறைகளை இப்போதைக்கு பயன்படுத்தலாம் என்றும் டெல்லி அரசு வழக்கறிஞர் தெரிவித்திருந்த நிலையில் டெல்லி உயர் நீதிமன்றம் அதனை ஏற்றுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்