Section 144: மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் அடுத்த 60 நாள்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வரும் 28ஆம் தேதி முதல் இந்த கட்டுப்பாடுகள் அமலுக்கு வர உள்ளதாக கொல்கத்தா காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் வன்முறை சம்பவங்கள் நடைபெறும் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்ததையடுத்து பொது இடங்களில் 5 அல்லது அதற்கு மேற்பட்டோர் கூடக் கூடாது என கொல்கத்தா காவல்துறை தெரிவித்துள்ளது.


இதுகுறித்து கொல்கத்தா காவல் ஆணையர் வினீத் குமார் கோயல் கூறுகையில், "28.05.2024 முதல் 26.07.2024 வரை 60 நாட்களுக்கு ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் சட்டவிரோதமாக ஒன்றுகூடுவதைத் தடைசெய்யும் ஐபிசி பிரிவு 144 ஐ கொல்கத்தா காவல்துறை ஆணையர் பிறப்பித்துள்ளார்.


 






பொது ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் வன்முறை சம்பவங்கள் நடைபெறும் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்ததையடுத்து தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது" என்றார். பிரதமர் நரேந்திர மோடியின் ரோட்ஷோவை நிறுத்துவதற்காகவே முதலமைச்சர் மம்தா பானர்ஜி இந்த முடிவை எடுத்துள்ளதாக கொல்கத்தா காவல்துறையின் முடிவை மேற்குவங்க பாஜக கடுமையாக சாடியுள்ளது.

 

இதுகுறித்து மேற்குவங்க பாஜக தலைவர் சுகந்தா மஜும்தார் குறிப்பிடுகையில், "5 கட்ட தேர்தல் முடிந்து மக்களின் முடிவை உணர்ந்த முதலமைச்சர், தற்போது அச்சத்தில் உள்ளார். ஒரு அவநம்பிக்கையான நடவடிக்கையாக, மோடியின் ரோட் ஷோவை நிறுத்துவதற்காக கொல்கத்தாவில் 144 ஆவது பிரிவை அமல்படுத்துமாறு அவர் காவல்துறைக்கு உத்தரவிட்டார். திரிணாமுல் காங்கிரஸுக்கு தெரியப்படுத்துங்கள்: எந்த தீய தந்திரங்களாலும் பாஜகவை தடுக்க முடியாது" என பதிவிட்டுள்ளார்.

 





பாஜகவின் விமர்சனத்திற்கு பதில் அளித்துள்ள மேற்குவங்க காவல்துறை, "டல்ஹவுசி மற்றும் விக்டோரியா  ஹவுஸ் அருகில் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144 உத்தரவை பிறப்பிப்பது வழக்கமான ஒன்று. 

இது ஒன்றும் புதிதல்ல. முந்தைய உத்தரவு நகல்களும் இணைக்கப்பட்டுள்ளன. எனவே தவறான தகவல்களை பரப்புவதை தவிர்க்கவும்" என தெரிவித்துள்ளது.