Jharkhand CM: ஜார்கண்ட்டில்  முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் வீடு, ஆளுநர் மாளிகை மற்றும் அமலாக்கத்துறை அலுவகலகத்தை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


ராஞ்சியில் 144 தடை உத்தரவு:


ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் வீடு, ஆளுநர் மாளிகை மற்றும் ராஞ்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் ஆகியவற்றின் 100 மீட்டர் சுற்றளவிற்கு, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு இரவு 10 மணி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில், மேற்குறிப்பிடப்பட்ட பகுதிகளில் எந்த விதமான போராட்டம் அல்லது ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.






ஹேமந்த் சோரன் தலைமறைவா? 


பணமோசடி தொடர்பான வழக்கு விசாரணைக்காக, டெல்லியில் உள்ள ஹேமந்த் சோரன் வீட்டிற்கு நேற்று இரவு அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்று இருந்தனர். ஆனால், அங்கு அவர் இல்லாத நிலையில், தற்போதைய சூழலில் அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்ல என அமலாக்கத்துறையினர் தெரிவித்துள்ளனர். அதோடு, அந்த இல்லத்தில் சோதனை நடத்திய பிறகு, சில ஆவணங்கள் மற்றும் அவரது BMW காரை சட்டவிரோத நிதியைப் பயன்படுத்தி வாங்கப்பட்டதாகக் கூறி கைப்பற்றினர். இந்நிலையில் தான், ராஞ்சியில் உள்ள குறிப்பிட்ட சில பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


அமலாக்கத்துறை சம்மனும், ஹேமந்த் சோரனின் பதிலும்:


பணமோசடி வழக்கில் கடந்த வாரம் ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு, அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. அதில், ஜனவரி 29 அல்லது 31ம் தேதிகளில் விசாரணைக்கு நேரம் ஒதுக்குமாறு வலியுறுத்தப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக அமலாக்கத்துறைக்கு ஹேமந்த் சோரன் எழுதியிருந்த பதில் கடிதத்தில், “ஜார்கண்ட் மாநில சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 2ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரையில் நடைபெறும் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். அந்த காலகட்டத்தில் அரசின் முக்கிய பிரதிநிதிகள் அனைவரும் கட்டாயம் அந்த கூட்டத்தொடரில் பங்கேற்பார்கள்.  அப்படி இருக்கையில் 31 ஜனவரி 2024 அன்று அல்லது அதற்கு முன் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று நீங்கள் வலியுறுத்துவது, மாநில அரசாங்கத்தின் செயல்பாட்டை சீர்குலைக்கும் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி தனது அதிகாரப்பூர்வ கடமைகளை நிறைவேற்றுவதைத் தடுக்கும், உங்களது அரசியல் உள்நோக்கத்தை வெளிப்படுத்துகிறது” என ஹேமந்த் சோரன் தெரிவித்து இருந்தார்.


ஏற்கனவே, இந்த பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையின் 7 சம்மன்களை அனுப்பியும், ஹேமந்த் சோரன் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தார். இதையடுத்து நீண்ட இழுபறிக்கு பிறகு, கடந்த 20ம் தேதி ஹேமந்த் சோரனின் வீட்டிற்கே சென்று அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 7 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணையில், ஹேமந்த் சோரனிடம் பல்வேறும் கேள்விகள் எழுப்பபப்ட்டன. இந்நிலையில், மீண்டும் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய நிலையில், ஹேமந்த் சோரன் தற்போது எங்கு இருக்கிறார் என்றே யாருக்கும் தெரியாத சூழல் நிலவுகிறது.