சீனப் பெண்ணை பின்னுக்குத் தள்ளி ஆசியாவின் பெரும் பணக்காரப் பெண் ஆகியுள்ளார் சாவித்ரி ஜிண்டால்.
சீனாவின் யாங் ஹூயான் 24 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் ஆசியாவின் பெரும் பணக்காரப் பெண்கள் பட்டியலில் 2021ல் முதலிடத்தில் இருந்தார். ஆனால் சீனாவில் ஏற்பட்டுள்ள ரியல் எஸ்டேட் துறை சரிவால் அவர் இந்த ஆண்டு (2022) பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளார். யாங் ஹூயான் கன்ட்ரி கார்டன் ஹோல்டிங்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் தலைவராவார். சீன ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்ட சரிவால் அவர் இந்த ஆண்டு 11 பில்லியன் டாலர் இழப்பை சந்தித்துள்ளார். இதனால் இந்தியாவின் சாவித்ரி ஜிண்டால் முதலிடத்திற்கு வந்துள்ளார்,
சொத்து மதிப்பு எவ்வளவு?
சாவ்த்ரி ஜிண்டாலின் சொத்து மதிப்பு 18 பில்லியன் டாலர் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. 2021ல் ஃபோர்ப்ஸ் பணக்கார இந்தியர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்த ஒரே இந்தியப் பெண் என்ற பெருமையைப் பெற்றிருந்தார். பட்டியலில் முதல் இடமும் பிடித்திருந்தார்.
யாங் ஹூயானும் சளைத்தவர் அல்ல. கடந்த 5 ஆண்டுகளாக அவர் தான் ஆசியாவின் பெரும் பணக்காரப் பெண் என்ற இடத்தை தக்கவைத்திருந்தார். கொரோனா காலத்தினால் ஏற்பட்ட பாதிப்பால் 2020 ஏப்ரலில் சாவித்ரியின் சொத்து மதிப்பீடு 3.2 பில்லியன் டாலர் வரை குறைந்தது. ஆனால் கொரோனாவுக்கு பின்னர் சீரான எழுச்சி கண்ட அவரது சொத்து மதிப்பு ஏப்ரல் 2022ல் 15.6 பில்லியன் டாலராக உயர்ந்தது.
2005 தொடர்பு:
யாங் ஹூயான் கடந்த 2005 ஆம் ஆண்டு அவரது தந்தையின் சொத்தைப் பெற்றார். அப்போது அவர் உலகின் இளம் பில்லினர் என்ற அந்தஸ்தைப் பெற்றார். 2018 ஆம் ஆண்டு 4 நாட்களில் 2 பில்லியன் டாலர் சம்பாதித்து உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தார். ஆனால் அடுத்த நாளே அவர் 1 பில்லியன் டாலருக்கு மேல் வர்த்தகத்தில் இழந்தார்.
41 வயதான யாங் ஹூயான் தற்போது கன்ட்ரி கார்டன் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் 60% ஐ நிர்வகிக்கிறார். 43 சதவீத பங்குகள் மேலாண்மை சேவை பிரிவுகள் வசம் உள்ளது.
2005ம் சாவித்ரி ஜிண்டாலும்:
2005ல் யாங் ஹூயான் உலகின் இளம் பில்லினர் ஆனார். அதே 2005ல் தான் சாவித்திரி ஜிண்டால் தனது கணவர் ஓபி ஜிண்டாலை இழ்ந்தார். ஓபி ஜிண்டால் ஒரு ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தார். அப்போது சாவித்ரிக்கு வயது 55. அதன் பின்னர் ஓபி ஜிண்டால் குழுமத்தின் நிர்வாகத் தலைவர் பொறுப்பில் அவர் அமர்த்தப்பட்டார். அன்றிலிருந்து ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் ஓபி ஜிண்டால் குழுமம் உலகம் அறிந்த குழுமமாக இருக்கிறது. இரும்பு மற்றும் மின் துறை தொழில்களில் கொடி கட்டி பறக்கிறது.
சாவித்ரி ஜிண்டாலுக்கு 9 குழந்தைகள். இவர்களில் 4 பேர் மகன்கள். பிருத்விராஜ், சாஜன், ரத்தன், நவீன் ஜிண்டால் ஆகிய 4 பேர் தான் தற்போது ஓபி ஜிண்டால் குழுமத்தை நிர்வகித்து வருகின்றனர்.