நீர் மின் திட்டத்தில் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்தியபால் மாலிக், அவரது தனிச் செயலாளர்கள் உள்பட 7 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது சிபிஐ.
யார் இந்த சத்தியபால் மாலிக்?
கடந்த 2018ஆம் ஆண்டு, ஜம்மு காஷ்மீரில் உச்சக்கட்ட அரசியல் பரபரப்புக்கு மத்தியில் பிகார் மாநில ஆளுநராக பதவி வகித்து வந்த சத்தியபால் மாலிக் ஜம்மு காஷ்மீர் ஆளுநராக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நியமித்தது.
இவர், ஆளுநராக பதவிவகித்தபோதுதான் ஜம்மு காஷ்மீர், பல்வேறு அரசியல் கொந்தளிப்புகளை எதிர்கொண்டது. குறிப்பாக, புல்வாமா தாக்குதல், சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது, இணையம் முடக்கப்பட்ட சம்பவங்கள் சத்யபால் மாலிக் ஆளுநராக பதவி வகித்தபோதுதான் நடந்தது.
பின்னர், ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு, யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டதையடுத்து, கோவாவுக்கும் அதன் பின்னர், மேகாலயா மாநில ஆளுநராகவும் சத்யபால்மாலிக் மாற்றப்பட்டார். அரசியல் கொந்தளிப்புகளுக்கு மத்தியில் ஜம்மு காஷ்மீரை கவனித்து கொள்ளும்படி, பிரதமர் மோடி அரசால் நியமிக்கப்பட்ட சத்யபால் மாலிக், அரசியலில் புயலை கிளப்பும் விதமாக பிரதமருக்கு எதிராகவே பகீர் குற்றச்சாட்டுகளை சுமத்தினார். இதையடுத்து, அவரது ஆளுநர் பதவி பறிக்கப்பட்டது.
வழக்கு பின்னணி என்ன?
கடந்த 2019 ஆம் ஆண்டில் கிரு ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் திட்டத்தின் (HEP) குடிமராமத்து பணிகளின் சுமார் 2,200 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை ஒரு தனியார் நிறுவனத்திற்கு வழங்கியதில் முறைகேடு நடந்ததாகக் கூறி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஜம்மு காஷ்மீர் ஆளுநராக பதவி வகித்த காலத்தில் சத்யபால் மாலிக், கிரு நீர் மின் திட்டம் உள்ளிட்ட இரண்டு திட்டங்கள் தொடர்பான கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்க ரூ. 300 கோடி லஞ்சம் அளிக்க சிலர் முற்பட்டதாக குற்றம் சாட்டியிருந்தார். இதனால், அவர் லஞ்சம் பெற்று இருக்கக் கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், சத்யபால் மாலிக் தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்றது.
இந்த நிலையில், இந்த வழக்கில் சத்தியபால் மாலிக், அவரது தனிச் செயலாளர்கள் இருவர், மேலும் 4 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது சிபிஐ.