Sandeshkhali Issue: சந்தேஷ்காலி விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேற்குவங்கம் மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகி ஷாஜகான் ஷேக்கிற்கு எதிராக சந்தேஷ்காலி கிராமத்தை சேர்ந்த பெண்கள் அளித்த பாலியல் வன்கொடுமை புகார் பெரும் பிரச்னையாக வெடித்தது.   


மக்களவை தேர்தலையொட்டி அம்மாநில முதலமைச்சர் மம்தாவுக்கு இது பெரும் சிக்கலாக மாறியது. இந்த விவகாரத்தை முன்னிறுத்தி பாஜக கடுமையாக பிரச்சாரம் மேற்கொண்டது. இந்த நிலையில், இந்த விவகாரத்தில் புதிய திருப்பம் நடந்துள்ளது.


சந்தேஷ்காலி விவகாரத்தில் புது ட்விஸ்ட்:


ஷாஜகான் ஷேக்கிற்கு எதிராக அளித்த புகாரை இரண்டு பெண்கள் வாபஸ் வாங்கியுள்ளனர். தேசிய பெண்கள் ஆணையம் சொல்லித்தான் தாங்கள் புகார் அளித்ததாகவும் வெற்று காகிதத்தில் தங்களை கட்டாயப்படுத்தி கையெழுத்து போட வைத்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.


செய்தியாளர்களை சந்தித்து பேசிய பெண்கள், "டெல்லி பெண்கள் ஆணையம் சொல்லித்தான் புகாரின் உள்ளடக்கம் கூட தெரியாமல் நானும் எனது மாமியாரும் போலி பாலியல் வன்கொடுமை புகார்களை பதிவு செய்ய நிர்பந்திக்கப்பட்டோம்.


100 நாள் வேலைத் திட்டத்தில் எங்களுக்கு கிடைக்க வேண்டிய பணம் கிடைக்கவில்லை என்று அவர்களிடம் கூறினேன். எனக்கு அந்த பணம் மட்டுமே தேவை. வேறு எந்த புகாரும் தேவை இல்லை. பாலியல் வன்கொடுமை எல்லாம் நடக்கவில்லை. பியாலி என்பவர் எங்களை ஒரு வெற்று காகிதத்தில் கையெழுத்திட வைத்தார்.


புகாரை வாபஸ் வாங்கிய பெண்கள்:


உள்ளூர் திரிணாமுல் தலைவர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும் பெண்களின் பட்டியலில் நான் இருக்கிறேன் என்பது பின்னர்தான் தெரியவந்தது" என்றார்.


பாதிக்கப்பட்டதாக சொல்லப்படும் பெண்ணின் மாமியார், இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், "அவர் (பியார்) வெளியூர்க்காரர்.  எங்கிருந்தோ வந்து பெரிய குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார். இங்குள்ள எல்லோரையும் பற்றிய தகவல் அவருக்கு எப்படி தெரியும் என்று தெரியவில்லை.


ஆரம்பத்தில் இங்கு நடக்கும் போராட்டங்களில் அவர் கலந்து கொள்வார். அவர் பிஜேபியில் இருக்கிறார் என்பது பின்னர் எங்களுக்குத் தெரியவந்தது. நம்மிடம் பொய் சொல்லி எங்களை மாட்டி வைத்ததற்காக அவர் தண்டிக்கப்பட வேண்டும். இன்னும் பலர் இப்படி ஏமாந்திருப்பார்கள் என்று நான் நம்புகிறேன்" என்றார்.


பாலியல் வன்கொடுமை புகாரை வாபஸ் பெறுவதால் தாங்கள் மிரட்டப்படுவதாகவும் தங்களை ஊரில் இருந்து ஒதுக்குவதாகவும் அந்த பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த பெண்ணும் அவரது மாமியாரும் மாஜிஸ்திரேட் முன்பு நேற்று வாக்குமூலம் அளித்தார்.


திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஷாஜகான், அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பான வழக்கில் ஒரு மாதத்திற்கும் மேலாக தலைமறைவாக இருந்த பின்னர் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது சிபிஐ காவலில் உள்ளார்.