தன்பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்க கோரி, நாட்டின் பல்வேறு உயர் நீதிமன்றங்களிலும் உச்ச நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் நிலுவையில் உள்ளன. ஆனால், தன்பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்க பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மறுத்து வருகிறது.
தன்பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்க மறுப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு ஏற்கனவே பதில் மனு தாக்கல் செய்திருந்தது. இதையடுத்து, கடந்த வாரம் நடைபெற்ற விசாரணையின்போது, தன்பாலின திருமணத்திற்கு மத்திய அரசு மீண்டும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் அனுமதியா?
இதற்கிடையே, சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் தன்பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்க முடியுமா என உச்ச நீதிமன்றம் பரிசீலனை செய்து வருகிறது.
இந்நிலையில், வழக்கின் விசாரணை 6ஆவது நாளாக இன்று தொடர்ந்தது. அப்போது, மத்திய அரசின் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியது. சிறப்பு திருமண சட்டத்தின் கீழ், மனைவி மற்றும் கணவனை இணையர் (spouse) என்று குறிப்பிட வேண்டும் என தன்பாலின தம்பதிகள் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
ஆணுக்கும் ஆணுக்கும் கல்யாணம் நடந்தா...அப்போ மனைவி யாரு?
இதற்கு பதில் அளித்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "ஆணுக்கும் ஆணுக்கும் திருமணம் நடந்தால், மனைவி என யாரை குறிப்பிடுவது? இணையர் இறந்தால், யாரை widow/widower என அழைப்பது" என கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து, திருமணம் செய்வதற்கான உரிமையை மறுப்பது தங்களின் அடிப்படை உரிமைகளை மறுக்கும் செயல் என்றும் பாகுபாடு மற்றும் சமூக விலக்கலுக்கு வழிவகுக்கும் என்றும் தனிபாலின தம்பதிகளுக்கு ஆதரவாக வாதம் முன்வைக்கப்பட்டது.
அப்போது, அடிப்படை சமூக உரிமைகளை தன்பாலின தம்பதிகளுக்கு வழங்க அரசு வழியை கண்டுபிடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. தன்பாலின தம்பதிகளுக்கு திருமண அந்தஸ்து வழங்காமல், இந்த பிரச்னைகளில் சிலவற்றை எவ்வாறு தீர்க்க முடியும் என்பதை அரசு ஆராய வேண்டும் என உச்ச நீதிமன்றம் கேட்டு கொண்டது.
இதற்கான பதிலை, வரும் புதன்கிழமை அளிக்கமாறு மத்திய அரசின் சார்பாக ஆஜரான சொலிசிட்டர் ஜெனரலை உச்ச நீதிமன்றம் கேட்டு கொண்டது.
தொடர்ந்து பேசிய இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், "தன்பாலின திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்குவது சட்டமன்றத்தின் வேலை என நீங்கள் சொல்கிறீர்கள். அதை ஏற்று கொள்கிறோம். ஆனால், தன்பாலின உறவில் அரசு என்ன செய்ய விரும்புகிறது? அவர்களுக்கு பாதுகாப்பு உணர்வு மற்றும் சமூக நலன்களை எப்படி வழங்க முடியும்? அத்தகைய உறவுகள் புறக்கணிக்கப்படுவதில்லை என்பது உறுதிப்படுத்தப்படுமா?" என கேள்வி எழுப்பினார்.