மும்பையில் நடிகர் சைஃப் அலிகானின் வீட்டில் புகுந்து மர்ம நபர் ஒருவர், அவரை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பி வருகிறது. இந்த சூழலில், வீட்டின் படிக்கட்டில் இருந்து அந்த மர்ம நபர் இறங்கி வரும் சிசிடிவி காட்சியை மும்பை காவல்துறை வெளியிட்டுள்ளது.
இந்தி திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் சைஃப் அலிகான். பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூரின் கணவரான இவர், சமீபத்தில் தெலுங்கில் வெளியான தேவாரா படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.
சைஃப் அலிகானை குத்தியது யார்?
மும்பையில் உள்ள பாந்த்ராவில் இவரது சொகுசு பங்களா அமைந்துள்ளது. நேற்று இரவு, இவரது வீட்டின் உள்ளே புகுந்த கொள்ளையர் ஒருவர், இவரை கத்தியால் குத்தியுள்ளார். இதனால், சைஃப் அலிகானுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. காயம் அடைந்த அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆபாய கட்டத்தை அவர் தாண்டிவிட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், சைஃப் அலிகானின் வீட்டில் புகுந்து, அவரை கத்தியால் குத்தியவரின் புகைப்படத்தை மும்பை காவல்துறை வெளியிட்டுள்ளது. வீட்டின் படிக்கட்டில் இருந்து அந்த மர்ம நபர் இறங்கி வரும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
டி ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் அணிந்திருக்கும் அந்த மர்ம நபர், முதுகில் பைன் ஒன்றை வைத்துள்ளார். அதை தவிர, ஆரஞ்சு நிற ஸ்கார்ஃப்பை கழுத்தில் கட்டி இருக்கிறார். இன்று அதிகாலை 2.33 மணியளவில் சைஃப் அலிகானின் வீட்டு படிக்கட்டில் அந்த மர்ம நபர் நடந்து செல்வது சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
வெளியானது பரபர சிசிடிவி காட்சி:
சைஃப் அலிகானின் வீட்டில் பணிபுரிந்து வரும் லிமா என்ற எலியாமா பிலிப்ஸ்தான், அந்த மர்ம நபரை முதலில் கண்டறிந்ததாக கூறப்படுகிறது. உடனே கத்தி, சைஃப் அலிகானை எச்சரித்திருக்கிறார். இதையடுத்து, அந்த மர்ம நபரை தடுத்து நிறுத்தி சண்டையிட்டுள்ளார் சைஃப் அலிகான்.
இந்த சண்டையில், சைஃப் கானை அந்த மர்ம நபர் ஆறு முறை குத்தி இருக்கிறார். இதனால் அவரது இடது கை மற்றும் கழுத்தில் காயம் ஏற்பட்டது. முதுகில் கத்தியால் குத்துவிட்டு அந்த மர்ம நபர் வெளியேறியதாகக் கூறப்படுகிறது.