Breaking LIVE : கிறிஸ்துமஸ்: கன்னியாகுமரியில் டிசம்பர் 24 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை
Breaking LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு இணையதளத்தில் கீழே உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
கிறிஸ்துமஸ் விழாவையொட்டி, கன்னியாகுமரியில் டிசம்பர் 24 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்
சென்னை லயோலா கல்லூரியில் இயேசு கிறிஸ்து பிறப்பை குறிக்கும் கிறிஸ்துமஸ் குடிலை, முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் 5 பேரை போலீஸ் காவலில் வைத்து விசாரணை செய்ய பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகளை துரிதபடுத்த, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.
உலக பொருளாதார மந்த நிலை அச்சத்தையொட்டி, இந்திய பங்குச் சந்தை சரிவுடன் முடிவடந்தது. இன்றைய பங்குச் சந்தையில், மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ்,103.90 புள்ளிகள் குறைந்து 61,702.29 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 35.15 புள்ளிகள் குறைந்து 18,385.30 புள்ளிகளில் வர்த்தகமானது.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, 13 காசுகள் குறைந்து 82.75ஆக உள்ளது.
அடுத்த 3 மணி நேரத்துக்குள்ளாக நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அரசு பணிகளில், மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வு வழங்குவது குறித்து ஆராய, தமிழ்நாடு அரசு குழு அமைத்து அரசாணை வெளியிட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான விதிமுறைகள் குறித்து கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் 22ம் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள கால்நடை ஆராய்ச்சி அலுவலகத்தில் இக்கூட்டம் நடைபெற உள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை முன்கூட்டியே முடித்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. டிசம்பர் 29-ஆம் தேதி வரை குளிர்கால கூட்டத்தொடர் நடத்த முடிவு செய்யப்பட்ட நிலையில், டிசம்பர் 23-ஆம் தேதியுடம் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தெற்கு வங்க கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய கிழக்கு இந்தியப் பெருங்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நீடித்து வருகிறது. இது அடுத்த 2 நாட்களில் மேற்கு-வடமேற்கு திசையில் மெதுவாக இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று முதல் வரும் 22-ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று வரை 1.20 கோடி பேர் ஆதாருடன் மின் இணைப்பு எண்ணை இணைத்துள்ளனர் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். ஆன்லைன் மூலமாக, 58 லட்சம் பேர், ஆதாருடன் மின் இணைப்பு எண்ணை இணைத்துள்ளனர்.
கோவையில் இருந்து மராட்டிய மாநிலம் கோலாப்பூருக்கு ஜனவரி முதல் விமான சேவை தொடங்கப்படும் என இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. ஜனவரி 13-ஆம் தேதியில் இருந்து கோவை-கோலாப்பூர் இடையே தினசரி விமானம் இயக்கப்படும் என இண்டிகோ தெரிவித்துள்ளது.
ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறி தமிழகத்தை சேர்ந்த 28 பேரிடம் மொத்தம் ரூ.2.5 கோடி மோசடி நடந்துள்ளது. வடக்கு ரயில்வே துணை இயக்குனர் என்று கூறி விகாஸ் ராணா என்பவர் தலா ரூ.2 லட்சம் முதல் ரூ.24 லட்சம் வசூலித்து மோசடி செய்துள்ளார்.
Background
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களின் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு உடனடி முன்பதிவு முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் அமைந்துள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் மகர விளக்கு மற்றும் மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர் 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. இதையடுத்து பல மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கடந்த 30 நாட்களில் மட்டும் சுமார் 20 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா தொற்றுக்குப் பின் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் முழுவதுமாக தளர்த்தப்பட்டுள்ளதால் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
இதனால் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தரிசனம் செய்யும் பக்தர்களை உடனடியாக சன்னிதானம் பகுதியில் இருந்து உடனடியாக பக்தர்களை வெளியேற்ற காவல்துறை அதிகாரிகள், தன்னார்வலர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். நாள்தோறும் 90 ஆயிரம் வரை பக்தர்கள் தரிசனம் செய்து வருவதாக கூறப்படும் நிலையில் ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு நடைமுறை பின்பற்றப்படுகிறது.
கூட்டநெரிசலால் பெண்கள், குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டத்தைக் கட்டுப்படுத்த திருவிதாங்கூர் தேவஸ்தானம் மற்றும் கேரள அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்ன என மாநில உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து தான் நாள்தோறும் 90 ஆயிரம் வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என்ற முறை அமல்படுத்தப்பட்டது. மேலும் பெண்கள்,குழந்தைகள், முதியவர்களுக்கு தனிவரிசை ஏற்படுத்தப்பட்டது.
அதேசமயம் வரிசையில் நிற்பவர்கள் பல மணி நேரம் உணவே, தண்ணீரோ இல்லாமல் நிற்பதாக புகார் எழுந்தது. இப்படியான குற்றச்சாட்டுகளை களையும் வகையில் தேவசம்போர்டு மற்றும் காவல்துறை அதிகாரிகள் பல்வேறு ஆலோசனையில் ஈடுபட்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் சன்னிதானத்தில் உள்ள 18-ஆம் படி வழியாக ஒரு நிமிடத்திற்கு 80 பக்தர்களை வேகமாக மேலே ஏற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்தில் 4,800 பக்தர்கள் வரை சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் உடனடி தரிசன முன்பதிவு வசதி முறை ரத்து செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -