இந்த வருடத்திற்கான சபரிமலை சீசன் விரைவில் துவங்க உள்ளது. இதனால் சபரிமலை ஐயப்ப பக்தர்கள் அனைவரும் மாலை அணிந்து, விரதத்தை துவக்க தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஆண்டில் சபரிமலை போக திட்டமிடிருந்தால் சில முக்கிய தகவல்களை கண்டிப்பாக தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இந்த ஆண்டு மண்டல-மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நவம்பர் 16ம் தேதி மாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, சுவாமி ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட உள்ளது. நவம்பர் 17ம் தேதி அதிகாலை 4 மணி முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.இந்த ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை நவம்பர் 17ம் தேதி துவங்கி, டிசம்பர் 27ம் தேதி வரை நடைபெற உள்ளது. டிசம்பர் 27ம் தேதி மண்டல பூஜை, படி பூஜைக்கு பிறகு இரவு ஹரிவராசனம் பாடப்பட்டு, கோவில் நடை அடைக்கப்படும்.
மகரவிளக்கு மகோற்சவத்திற்காக மீண்டும் டிசம்பர் 30ம் தேதி அதிகாலை சபரிமலை ஐயப்பன் கோயில் நடைதிறக்கப்படும்.2026ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி மகரசங்கராந்தி நாளில் மகரவிளக்கு உற்சவம் நடைபெற உள்ளது. 2026ம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி சபரிமலை கோயில் நடை திறந்திருக்கும். பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு தொடர்ந்து அனுமதிக்கப்படுவார்கள்.இந்த ஆண்டு சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்வதற்கான விர்சுவல் க்யூவிற்கான ஆன்லைன் புக்கிங் நவம்பர் 01ம் தேதி துவங்கப்பட்டு, நவம்பர் 05ம் தேதி மாலையுடன் நிறைவடைந்து விட்டது. சாமி தரிசனம், பூஜைகள், சன்னிதானத்தில் தங்குவதற்கான ஆன்லைன் புக்கிங் நவம்பர் 05ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.இந்த ஆண்டு சபரிமலை செல்ல திட்டமிட்டிருப்பவர்கள் திருவிதாங்கூர் தேவசம் போர்டின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று உங்களின் ஆதார் எண், மொபைல் நம்பர், பெயர் உள்ளிட்ட விபரங்களை அளித்து முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இந்த ஆண்டு ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்து வரும் பக்தர்கள் ஒரு நாளைக்கு 70,000 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர். நேரடியாக சபரிமலைக்கு வந்து ஸ்பாட் புக்கிங் செய்து வரும் பக்தர்கள் ஒரு நாளைக்கு 20,000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். ஸ்பாட் புக்கிங் செய்வதற்கான கவுன்ட்டர்கள் எரிமேலி, நிலக்கல், பம்பா, வண்டி பெரியாறு கெஸ்ட் ஹவுஸ் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது. சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
சபரிமலையில் இந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாத துவக்கத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், டிசம்பர் முதல் வாரத்திற்கு பிறகு மழை படிப்படியாக குறையும் என்றும் வானிலை ஆய்வு மைய கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த சமயத்தில் சபரிமலை செய்ய திட்டமிட்டிருக்கும் பக்தர்கள் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் செல்லும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மழை நிலவரத்தை கணக்கிட்டு பக்தர்கள் தங்களின் சபரிமலை யாத்திரையை திட்டமிட்டுக் கொள்ளலாம் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.