சபரிமலை தீர்ப்பு மறுபரிசீலனை: உச்ச நீதிமன்றம் அதிரடி! ஏப்ரல் 7 முதல் விசாரணை, பரபரப்பு தகவல்கள்!
சபரிமலை கோவிலில் பெண்கள் அனுமதிக்கப்படுவது குறித்து மத சுதந்திரமா? பாலின சமத்துவமா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. இந்த வழக்கில், கடந்த 2018ம் ஆண்டு உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பை கொடுத்தது.
கேரளாவில், சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் வழிபட வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிரான சீராய்வு மனுக்களை, உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, ஏப்ரல் 7ம் தேதி முதல் விசாரணை செய்ய உள்ளது.
சபரிமலை கோவிலில் பெண்கள் அனுமதிக்கப்படுவது குறித்து மத சுதந்திரமா? பாலின சமத்துவமா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. இந்த வழக்கில், கடந்த 2018ம் ஆண்டு உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பை கொடுத்தது. அதன்படி இனி அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு போகலாம் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இந்த தீர்ப்பு இந்து அமைப்புகளிடையே கடுமையான எதிர்வினையை ஏற்படுத்தியது. இருப்பினும் இந்து அமைப்புகள் இந்த தீர்ப்பை எதிர்த்து நேரடியாக உச்சநீதிமன்றத்தை நாடவில்லை. மாறாக இந்த தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருக்கும் சீராய்வு மனுக்களுக்கு ஆதரவான ஆதாரங்களை திரட்டி கொடுப்பது, வழக்கறிஞர்களாக வாதங்களை முன்வைப்பது என்கிற பணிகளை மேற்கொண்டன.
கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில், உலக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளது. இங்கு, 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி இல்லை. அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, 2018 செப்டம்பரில், 4:1 என்ற விகிதத்தில் பெரும்பான்மை தீர்ப்பு அளித்தது. அதாவது, சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கேரளா முழுதும் போராட்டங்கள் வெடித்தன. இத்தீர்ப்பை எதிர்த்து, 60-க்கும் மேற்பட்ட சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கை நேரடியாக முடிக்காமல், இதில் அடங்கியுள்ள ஆழமான சட்டக் கேள்விகளை தீர்க்க, ஏழு அல்லது அதற்கு மேற்பட்ட நீதிபதிகள் அடங்கிய பெரிய அமர்வுக்கு மாற்றி, 2019 நவம்பரில் உத்தரவிட்டது.
அதன்பின், இந்த விவகாரம் விசாரணைக்கு வராமலேயே இருந்த நிலையில், தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, விபுல் எம்.பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கு எப்போது விசாரிக்கப்படும் என்பதற்கான விபரங்களை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, ஏப்ரல் 7ம் தேதி முதல் இந்த விவகாரத்தை விசாரிக்கும் என, அமர்வு குறிப்பிட்டது. மார்ச் 14ம் தேதி சம்பந்தப்பட்ட தரப்பினர் தங்களது எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும். ஏப்ரல் 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை, சபரிமலை தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோருபவர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவான தரப்பினரின் வாதங்கள் கேட்கப்படும். ஏப்ரல் 14 முதல் 16ம் தேதி வரை, மறு ஆய்வை எதிர்ப்பவர்களின் வாதங்கள் கேட்கப்படும். ஏப்ரல் 21ல், பதில் வாதங்கள் வைக்கப்படும். ஏப்ரல் 22ல், நீதிமன்றத்திற்கு உதவும் வகையில் நியமிக்கப்பட்ட வழக்கறிஞரின் இறுதி வாதங்களுடன் விசாரணை நிறைவடையும் என, அமர்வு தெரிவித்துள்ளது.























