சபரிமலை ஐயப்பன் கோயிலின் வெளியே 12 துவாரபாலகர் சாமி சிலை உள்ளது. இந்த சிலையில் தங்க முலாம் பூசப்பட்ட கவசங்கள் பொருத்தப்பட்டு இருந்தது. கடந்த 1999-ம் ஆண்டு வடிவமைக்கப்பட்ட சிலையின் கவசம் பொலிவு இழந்ததால், கவசத்தை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக தொழில் அதிபர் உன்னிகிருஷ்ணன் தலைமையில் சென்னையில் செயல்படும் ஒரு தனியார் நிறுவனத்திடம் கவசம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது அந்த கவசத்தின் எடை 42.800 கிலோவாக இருந்தது. பணிகள் முடிந்து சபரிமலைக்கு திரும்ப கொண்டு வரப்பட்டபோது, எடை குறைவாக இருந்தது. இதுதொடர்பாக கேரள உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்தது.
அப்போது தங்க முலாம் பூசப்பட்ட கவசங்கள் எடை குறைந்த விவகாரத்தை விசாரிக்க திருவிதாங்கூர் தேவசம்போர்டு, ஊழல் தடுப்பு பிரிவு குழுவுக்கு உத்தரவிட்டது. விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஐயப்பன் கோவில் சன்னிதானத்தில் உள்ள 2 துவார பாலகர் சிலைகளில் இருந்து சுமார் 4 கிலோ தங்கம் மாயமானதாக புகார் எழுந்தது கேரளாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சிலைகளை செப்பனிடுவதற்காக சென்னைக்கு கொண்டு வரப்பட்டு மீண்டும் கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், துவார பாலகர் சிலைகளின் தங்க முலாம் பூசப்பட்ட அடிப்பீடங்கள் காணாமல் போனதாக தங்கத் தகடுகளை புதுப்பிக்க இடைத்தரகராக செயல்பட்ட உன்னிகிருஷ்ணன் போற்றி என்பவர் புகார் அளித்த நிலையில் அவை அவரின் சகோதரி வீட்டில் இருந்து மீட்கப்பட்டன.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள கேரளா உயர் நீதிமன்றம் சிறப்பு விசாரணைக் குழுவை நியமித்துள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் இடைத்தரகராக செயல்பட்ட உன்னிகிருஷ்ணன் மற்றும் தேவசம்போர்டு துணை ஆணையர் முராரி பாபு, திருவிதாங்கூர் தேவசம் வாரிய செயலர் ஜெயஸ்ரீ, செயல் அதிகாரி சதீஷ், நிர்வாக அதிகாரி ஸ்ரீகுமார், முன்னாள் திருவாபரணம் ஆணையர் கே.எஸ். பைஜு உள்ளிட்ட 9 அதிகாரிகள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக கேரள உயர் நீதிமன்ற உத்தரவில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணையை 6 வாரங்களுக்குள் முடிக்கவும், 2 வாரங்களில் முதற்கட்ட அறிக்கையை தாக்கல் செய்யவும் கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, சிறப்பு விசாரணைக்குழு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், சபரிமலை கோவிலில் தங்கம் மாயமான விவகாரம் தொடர்பாக முதற்கட்ட விசாரணையை அறிக்கையை சிறப்பு புலனாய்வுக்குழு இன்று கேரள ஐகோர்ட்டில் தாக்கல் செய்தது. நீதிபதிகள் விஜயராகவன், விஜயகுமார் ஆகியோரை கொண்ட அமர்வு முன்பு சீல் வைக்கப்பட்ட கவரில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் இன்றி தனி அறையில் வீடியோ பதிவுகளுடன் நீதிபதிகள் முன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்ட அறிக்கையில் பல்வேறு தகவல்கள் வெளிவரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.