பிற கோயில்கள் போல ஐயப்பன் கோயில் அனைத்து நாட்களும் திறக்கப்படாது. கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். இந்த கோயிலுக்குச் செல்ல மாலை அணிந்து கடுமையான விரதம் இருந்து மலையேறி பக்தர்கள் ஐயப்பன் சாமியை வழிபடுவார்கள்.

Continues below advertisement

ஒவ்வொரு மாதத்தின்  5  நாட்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை திறக்கப்படுவது வழக்கம். திருவிதாங்கூர் தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இந்த கோயிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். சபரிமலையில் ஒவ்வொரு தமிழ் மாத தொடக்கத்திலும் நடை திறக்கப்பட்டு 5 நாட்கள் சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில், சபரிமலையில் நடப்பு மண்டல, மகர விளக்கு சீசன் வருகிற நவம்பர் மாதம் தொடங்க இருக்கும் நிலையில் அமைச்சர் முரளீதரன் தலைமையில் திருவனந்தபுரத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்திற்கு பிறகு  அவர்  செய்தியாளர்களை சந்தித்தார்.

Continues below advertisement

அப்போது அவர் கூறியதாவது, மண்டல மகரவிளக்கு சீசன் தொடங்க இன்னும் 4 மாதங்கள் உள்ளன. எனவே தரிசனத்திற்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களின் அடிப்படை வசதிகளை திறம்பட மேம்படுத்தி செயல்படுத்த அந்தந்த துறை அதிகாரிகளுக்கு இப்போதே உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் நடந்த தவறு, இந்த ஆண்டு நடைபெறாத வகையில் செயல்படுவது உறுதி செய்யப்படும்.

சீசனில் பக்தர்களின் கூட்ட நெரிசல் மிகப்பெரிய பிரச்சினையாக ஒவ்வொரு ஆண்டும் இருந்து வருகிறது. இந்த ஆண்டு ஏ.ஐ. தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கூட்ட நெரிசல் கட்டுப்படுத்தப்படும். அனைத்து பக்தர்களுக்கும் சபரிமலை தரிசனம் உறுதி செய்யப்படும். சீசனுக்கு முன்னதாக முதல்-மந்திரி தலைமையில் தென் மாநில மந்திரிகளின் கூட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.