கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தையொட்டி மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோயிலில் நடை திறக்கப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கோயில் நடை கடந்த 16ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்ப சாமி கோயிலில் 41 நாட்கள் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். ஐயப்ப பக்தர்கள் விரதம் இருந்து, கருப்பு உடை அணிந்து இருமுடி கட்டி தலையில் சுமந்து பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்ய மணிக்கணக்கில் வரிசையில் நின்று சரண கோஷம் முழங்க 18 படி ஏறி ஐயப்பனை வழிபடுவர்.
பிற கோயில்கள் போல ஐயப்பன் கோயில் அனைத்து நாட்களும் திறக்கப்படாது. இந்த கோயிலுக்குச் செல்ல மாலை அணிந்து கடுமையான விரதம் இருந்து மலையேறி பக்தர்கள் ஐயப்பன் சாமியை வழிபடுவார்கள். ஒவ்வொரு மாதத்தின் 5 நாட்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை திறக்கப்படுவது வழக்கம். சபரிமலையில் ஐயப்பனுக்கு 41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு மண்டலபூஜை நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சரண கோஷத்துடன் தரிசனம் செய்வார்கள். இந்த நிலையில், சபரிமலை கோயிலில் இந்தாண்டுக்கான மண்டல, மகர விளக்கு வழிபாடு கடந்த 17-ம் தேதி முதல் வழிபாடு நடந்து வருகிறது. தொடக்க நாட்களில் வரையறையின்றி பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதால் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, உடனடி தரிசன புக்கிங் 20 ஆயிரத்தில் இருந்து 5 ஆயிரமாக குறைக்கப்பட்டது.
இந்நிலையில், கேரள டிஜிபி ரவுடா சந்திரசேகர் நேற்று சன்னிதானத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். பின்னர், 2-வது பிரிவு காவலர் குழு நேற்று கோயில் பாதுகாப்புக்குப் பொறுப்பேற்றது. இதில் 1,543 பேர் உள்ளனர். இந்தக் குழுவில் ஒரு உதவி சிறப்பு அதிகாரி (ஏஎஸ்ஓ), 10 துணைக் கண்காணிப்பாளர்கள், 34 ஆய்வாளர்கள் உள்ளனர். சிறப்பு அதிகாரி எம்.எல்.சுனில், பக்தர்களை கையாள்வது குறித்த இவர்களுக்கு பயிற்சி அளித்தார். இதையடுத்து, பெரிய நடைப் பந்தலில் 2-ம் பிரிவு போலீசார் உறுதிமொழி ஏற்று பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்நிலையில், சுவாமி தரிசனத்துக்கான ஆன்லைன் முன்பதிவுகள் ஜன. 10-ம் தேதி வரை நிறைவடைந்துள்ளன. பக்தர்களின் கூட்டத்துக்கு ஏற்ப ஸ்பாட் புக்கிங் மாற்றி அமைக்கப்படுவதுடன், பல மணி நேரம் பதிவுக்காக காத்திருக்கும் நிலையும் உள்ளது. நேற்று வரை தரிசனம் செய்த பக்தர்களின் எண்ணிக்கை 8 லட்சத்தைக் கடந்துள்ளது என தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.