கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் பெரியார் புலிகள் காப்பகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1535 அடி உயரத்தில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. புகழ்பெற்ற இக்கோவிலில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு காலங்களில் பக்தர்கள் இருமுடி கட்டி, 41 நாட்கள் கடும் விரதமிருந்து பதினெட்டு படிகள் வழியாகச் சென்று ஐயப்பனை தரிசிப்பது வழக்கம். ஜாதி, மத பேதமின்றி அனைத்து பக்தர்களும் அனுமதிக்கப்படும் மிகச்சில கோவில்களில் இதுவும் ஒன்று.
ஐயப்பனை தரிசிக்க பக்தர்கள் ஏறும் இந்த 18 படிகளும், ஆன்மீகத்தில் 18 விதமான தத்துவங்களை அல்லது படிகளைக் குறிப்பதாக நம்பப்படுகிறது. வழக்கமாக, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை, ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் நாளும் (முதல் 5 நாட்களுக்கு) மாதாந்திர பூஜைக்காகத் திறக்கப்படுவது வழக்கம். தொடர்ந்து 5 நாட்கள் வழிபாடு நடைபெறும்.
அதற்காக, அன்றைய தினம் மாலை 5 மணியளவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல் சாந்தி பிரசாத் நம்பூதிரி நடையை திறந்து வைப்பார். அதைத் தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இந்த 5 நாட்களும் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். மாதாந்திர பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் கோவிலுக்கு வருவர்கள். கடைசி நாளில் கோவிலில் சகஸ்ர கலச சிறப்பு பூஜை நடைபெறும். அதனை தொடர்ந்து இரவு 11 மணிக்கு ஹரிவராசனம் பாடப்பட்டு கோவில் நடை அடைக்கப்படும்.
மாதந்தோறும் சபரிமலை செல்ல விருப்பம் உள்ளவர்கள் ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் வழிபாடு செய்யலாம். அதுமட்டுமின்றி சபரிமலை கோவில் நடை, முக்கிய பண்டிகைகள், மாதப் பூஜைகள் (ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் ஐந்து நாட்கள்), கார்த்திகை முதல் மார்கழி வரை மண்டல பூஜை, தை மாதம் மகர விளக்கு மற்றும் விஷு பண்டிகை , ஓணம் போன்ற விசேஷ நாட்கள் உட்பட குறிப்பிட்ட காலங்களில் திறந்திருக்கும்.
இந்தக் காலகட்டங்களில், கோவில் வழக்கமாக காலை 4:00 மணிக்குத் திறக்கப்பட்டு இரவு 11:00 மணிக்கு மூடப்படும். இருப்பினும், கூட்ட நெரிசலுக்கு இடமளிக்கும் வகையில், உச்ச பருவ காலங்களில் (உதாரணமாக, மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு) நேரங்கள் மாற்றியமைக்கப்படும்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் https://sabarimalaonline.org என்ற இணையதளம் வழியாக தரிசன நேரங்களை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
திறக்கும் நாட்கள் மற்றும் நேரங்கள்:
மாதாந்திர பூஜைகள்: ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்படும்.
மண்டல பூஜை காலம்: நவம்பர் 15 அல்லது 16 முதல் டிசம்பர் 26 அல்லது 27 வரை.
மகர விளக்கு காலம்: டிசம்பர் 30 முதல் ஜனவரி 20 வரை.
விசேஷ நாட்கள்: பங்குனி உத்திரம் மற்றும் விஷு திருவிழா நாட்களில்.
தினசரி பூஜை நேரங்கள்: அதிகாலை 3:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை. மாலை 3:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை.(திருவிழா காலங்களில் நேர மாற்றங்கள் இருக்கலாம்)
இந்த நிலையில், தமிழ் ஆடி மாதம் மற்றும் மலையாள கர்கிடகம் மாதப் பிறப்பை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை ஜூலை 16-ம்தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். நேற்று ஜூலை 21ந்தேதியுடன் 5 நாட்கள் வழக்கமான மாத பூஜை வழிபாடுகள் நடைபெற்றதை தொடர்ந்து இரவு 11 மணிக்கு சபரிமலை நடை அடைக்கப்பட்டது.
அடுத்த மாதாந்திர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை தமிழ் ஆவணி மாதம் மற்றும் மலையாள சிங்கம் மாதப் பிறப்பை முன்னிட்டு, வரும் ஆகஸ்ட் மாதம் 16-ம்தேதி நடை திறக்கப்பட்டு (5 நாட்கள்) 21-ம் தேதி வரை பக்தர்கள் வழிபாடு செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
அதனை தொடர்ந்து ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 24-ம்தேதி சபரிமலை நடை திறக்கப்பட்டு 4 நாட்கள் வழிபாட்டிற்கு பின்னர் ஆகஸ்ட் 28-ம்தேதி நடை அடைக்கப்படுகிறது. மேலும் 26-ம்தேதி ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
மாதாந்திர பூஜைக்காக தமிழ் புரட்டாசி மாதம் மற்றும் மலையாள கன்னி மாதப் பிறப்பை முன்னிட்டு, வரும் செப்டம்பர் மாதம் 16-ம்தேதி முதல் (5 நாட்கள்) 21-ம்தேதி வரை சபரிமலை கோவில் நடை திறந்திருக்கும்.
தமிழ் ஐப்பசி மாதம் மற்றும் மலையாள துலாம் மாதப் பிறப்பை முன்னிட்டு, வரும் அக்டோபர் மாதம் 17-ம்தேதி நடை திறக்கப்பட்டு (5 நாட்கள்) 22-ம்தேதி வரை பக்தர்கள் வழிபாடு செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
நவம்பர் 7-ம்தேதி ஸ்ரீ சித்திர திருநாள் ஆட்ட விசேஷத்திற்காக கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளது.
அதனை தொடர்ந்து மண்ட பூஜையை முன்னிட்டு நவம்பர் 16-ம்தேதி கோவில் நடை திறக்கப்பட்டு டிசம்பர் 27-ம்தேதி வரை பக்தர்கள் வழிபாட்டிற்காக திறந்திருக்கும்.
அதேபோல் மகர விளக்கு மகோற்சவத்தை முன்னிட்டு டிசம்பர் 30-ம்தேதி முதல் ஜனவரி (2027) 20-ம்தேதி வரை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறந்திருக்கும்.
பக்தர்தர்கள் தரிசனத்துக்காக sabarimala.org.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். சபரிமலை சன்னிதானத்தில் உள்ள தங்கும் அறைகளை www.onlinetdb.com என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு சார்பில் தெரிவிக்கப்படுள்ளது.