சபரிமலை ஐயப்பன் கோவிலில் அரவணை பிரசாதம் வாங்குவதற்கு பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது திருவிதாங்கூர் தேவசம் போர்டு. இந்த புதிய கட்டுப்பாடு தொடர்பான அறிவிப்பு பலகைகள் அரவணை விற்பனை கவுன்ட்டர்கள் முன்பு வைக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை டிச.27-ம் தேதி  நடைபெற உள்ளது. இந்த நிலையில் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருவதால் சபரிமலையில் மீண்டும் பக்தர்கள் கூட்டம் அலைமோத துவங்கி உள்ளது. இந்த ஆண்டு நவம்பர் 16ம் தேதி துவங்கிய ஐயப்பன் சீசனில் தற்போது வரை சாமி தரிசனம் செய்த பக்தர்களின் எண்ணிக்கை 25 லட்சத்தை கடந்துள்ளது. ஸ்பாட் புக்கிங் எண்ணிக்கை குறைக்கப்பட்ட பிறகும் லட்சக்கணக்கான பேர் சாமி தரிசனம் செய்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இந்நிலையில் சபரிமலை வரும் பக்தர்களுக்கு நபர் ஒருவருக்கு 20 டின்கள் மட்டுமே அரவணை பிரசாதம் வழங்கப்படும் என்ற கட்டுப்பாடு தற்காலிகமாக அமல்படுத்தப்பட்டுள்ளதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

Continues below advertisement

இது குறித்து தேவசம் போர்டு அதிகாரிகள் கூறுகையில், இதுவரை இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு அரவணை பிரசாத விற்பனை மிகவும் அதிகரித்துள்ளது. இதுவரை சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு கிடைத்துள்ள வருமானத்தில் பெரும் பங்கு அரவணை பிரசாத விற்பனை மூலம் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.பிற மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் அதிக அளவில் அரவணை பிரசாதம் வாங்கி வருவதாலும், அரவணை தயாரிப்பை விட விற்பனை அதிகரித்துள்ளதால் அரவணை பிரசாதம் விற்பனை செய்யப்படும் டின்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாலும் இந்த புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. வழக்கமாக ஒரு நாளைக்கு 2.5 லட்சம் முதல் 3 லட்சம் டின்கள் வரை உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் தினசரி அரவணை பிரசார டின்கள் விற்பனை என்பது 4 லட்சமாக உள்ளது.

ஏற்கனவே சேமித்து வைத்த ஒரு லட்சம் அரவணை டின்களும் எடுக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இருந்தாலும் தொடர்ந்து அரவணை விற்பனை அதிகரித்து வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் இன்னும் சில நாட்களில் சபரிமலையில் அரவணை பிரசாதத்திற்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்படும். இதனை தவிர்ப்பதற்காக தான் ஒரு நபருக்கு 20 டின்கள் மட்டுமே வழங்கப்படும் என தேவசம் போர்டு முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.இந்த ஆண்டு சபரிமலை சீசன் துவங்கிய முதல் 15 நாட்களிலேயே கோவில் வருமானம் ரூ.92 லட்சத்தை எட்டி உள்ளதாக கோவில் நிர்வாகத்தின் சார்பில் சமீபத்தில் தகவல் வெளியிடப்பட்டது. இந்த ஆண்டின் முதல் 15 நாட்களில் அரவணை பாயசம் பிரசாதம் மட்டும் ரூ.47 கோடிக்கு விற்பனை ஆகி உள்ளது. இது கடந்த ஆண்டின் முதல் 15 நாட்களுடன் ஒப்பிடுகையில் 46.86 சதவீதம் அதிகமாகும். அதே சமயம் அப்பம் விற்பனை, கடந்த ஆண்டில் இருந்து மாற்றம் இன்றி ரூ.3.5 கோடிக்கு மட்டுமே விற்பனையாகி உள்ளது.