சபரிமலை ஐயப்பன் கோயிலின் வெளியே 12 துவாரபாலகர் சாமி சிலை உள்ளது. இந்த சிலையில் தங்க முலாம் பூசப்பட்ட கவசங்கள் பொருத்தப்பட்டு இருந்தது. கடந்த 1999-ம் ஆண்டு வடிவமைக்கப்பட்ட சிலையின் கவசம் பொலிவு இழந்ததால், கவசத்தை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக தொழில் அதிபர் உன்னிகிருஷ்ணன் தலைமையில் சென்னையில் செயல்படும் ஒரு தனியார் நிறுவனத்திடம் கவசம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது அந்த கவசத்தின் எடை 42.800 கிலோவாக இருந்தது. பணிகள் முடிந்து சபரிமலைக்கு திரும்ப கொண்டு வரப்பட்டபோது, எடை குறைவாக இருந்தது. இதுதொடர்பாக கேரள உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்தது. அப்போது தங்க முலாம் பூசப்பட்ட கவசங்கள் எடை குறைந்த விவகாரத்தை விசாரிக்க திருவிதாங்கூர் தேவசம்போர்டு, ஊழல் தடுப்பு பிரிவு குழுவுக்கு உத்தரவிட்டது.

Continues below advertisement

இந்த நிலையில், தங்கம் மாயமான வழக்கில் பெங்களூரைச் சோ்ந்த தொழிலதிபா் உண்ணிகிருஷ்ணன் போற்றியை சிறப்பு விசாரணைக் குழுவினா் (எஸ்ஐடி) கைது செய்தனா். கேரளா மாநிலம் பத்தனம்திட்டாவில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட அவரை அக்டோபா் 30-ஆம் தேதி வரை எஸ்ஐடி காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளா்களிடம் பேசிய உண்ணிகிருஷ்ணன், ‘இவ்வழக்கில் என்னை சிலா் சிக்கவைத்துள்ளனா். அவா்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவா்’ என்றாா். நீதிமன்றத்துக்கு வெளியே அவரை நோக்கி ஒருவா் காலணி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த 2019-ஆம் ஆண்டில் சபரிமலை ஐயப்பன் கோயிலின் கருவறை கதவுகள் மற்றும் துவாரபாலகா் சிலைகளின் தங்கக் கவசங்களைப் புதுப்பிக்கும் பணிக்கான செலவை ஏற்றவா் உண்ணிகிருஷ்ணன். இப்பணிக்காக அவரிடம் ஒப்படைக்கப்பட்ட 42.8 கிலோ எடையுள்ள கவசங்கள், பின்னா் 38.2 கிலோவாக குறைந்துவிட்டதை கேரள உயா்நீதிமன்றம் அண்மையில் கண்டறிந்தது. இதைத் தொடா்ந்து, சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

Continues below advertisement

இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முக்கிய நபரான உண்ணிகிருஷ்ணனிடம் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவினா், அவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பின்னா், பத்தனம்திட்டா நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் அவா் ஆஜா்ப்படுத்தப்பட்டாா். தங்கக் கவசம் புதுப்பிப்பு பணியை மேற்கொண்ட சென்னை நிறுவனம் மற்றும் பிற தனிநபா்கள் குறித்து உண்ணிகிருஷ்ணனிடம் விரிவாக விசாரிக்க வேண்டியுள்ளதால், 14 நாள்கள் காவல் வழங்குமாறு எஸ்ஐடி தரப்பில் கோரப்பட்டது. அதையேற்றுக் கொண்ட நீதிபதி, அக்.30 வரை எஸ்ஐடி காவலில் விசாரிக்க அனுமதி வழங்கினாா். துவாரபாலகா் சிலைகளின் கவசங்களில் இருந்து சுமாா் 2 கிலோ தங்கத்தை முறைகேடு செய்துள்ளதாக, உண்ணிகிருஷ்ணன் போற்றி மீது எஸ்ஐடி அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அவரை காவலில் விசாரிக்க அனுமதி கோரி நீதிமன்றத்தில் எஸ்ஐடி சமா்ப்பித்த அறிக்கையில், ‘சபரிமலை கோயில் அா்ச்சகா்களின் உதவியாளராக கடந்த 2004 முதல் 2008 வரை உண்ணிகிருஷ்ணன் பணியாற்றியுள்ளாா். கடந்த 2019-இல் தங்கக் கவசங்கள் புதுப்பிக்கப்படும் முன்பு தமிழகம், கா்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் பல இடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, கடைசியாக சென்னை நிறுவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. அந்த நிறுவனத்தின் உதவியுடன் தங்கக் கவசங்களில் இருந்து சட்டவிரோதமாக தங்கம் எடுக்கப்பட்டுள்ளது. கவசங்களில் இருந்து தங்கத்தை முறைகேடு செய்த பிறகு புதிய கொடையாளா்களை அடையாளம் கண்ட உண்ணிகிருஷ்ணன், அதன் மூலம் பெற்ற தங்கத்தையும் பயன்படுத்தவில்லை. புதுப்பிப்பு பணிகளுக்குப் பிறகு உரிய பாதுகாப்பின்றி பலரது வீடுகள் மற்றும் கோயில்களுக்கு கவசங்கள் எடுத்துச் செல்லப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டுள்ளன. சபரிமலை கோயில் பாரம்பரியத்துக்கு மாறாக, இக்கவசங்கள் பல இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன’ என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.