அமெரிக்கா சென்றுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியையும் பாஜகவையும் கடுமையாக விமர்சித்து பேசினார். இதற்கு பதிலடி தந்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், "வெளிநாடு செல்லும் போது அரசியலில் ஈடுபடுவதை தவிர்த்துவிட்டு இந்தியா திரும்பியதும் தீவிரமாக விமர்சிப்பேன்" என்றார்.


"எப்படி எதிர்வினை ஆற்றுகிறேன் என்பதற்கு வித்தியாசம் இருக்கிறது"


பிரிக்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தென்னாப்பிரிக்கா தலைநகர் கேப் டவுனுக்கு  மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சென்றிருந்தார். அப்போது, தென்னாப்பிரிக்கா வாழ் இந்தியர்களுடன் நடைபெற்ற உரையாடலில் ஜெய்சங்கர் கலந்து கொண்டார். ஜெய்சங்கர் உரையாற்றியதை தொடர்ந்து, வெளிநாடு வாழ் இந்தியர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்து பேசினார்.


"வெளிநாடு செல்லும்போது அரசியல் செய்யாமல் இருக்க முயற்சி செய்வேன்"


அப்போது, ராகுல் காந்தியின் பெயரை குறிப்பிடாமல் அமெரிக்காவில் ஒருவர் கூறிய கருத்துகள் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று ஜெய்சங்கரிடம் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அவர், "பாருங்கள், எனக்காக மட்டுமே என்னால் பேச முடியும். வெளிநாடு செல்லும்போது அரசியல் செய்யாமல் இருக்க முயற்சி செய்வேன். நான் விமர்சனம் மேற்கொள்வதற்கு தயாராக இருக்கிறேன். ஆனால், தாய் நாட்டுக்கு சென்ற பிறகுதான் தீவிரமாக விமர்சிப்பேன். 


ஜனநாயக கலாசாரத்திற்கு உறுதியான கூட்டு பொறுப்பு உள்ளது. தேசிய நலன் மற்றும் கூட்டு நற்பெயர் ஆகியவற்றுக்கு உழைப்பதை போன்று பொறுப்பு உள்ளது" என்றார்.


ராகுல் காந்தி பேசியது என்ன?


முன்னதாக, சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் பேசிய ராகுல் காந்தி, "கடவுளை விட தங்களுக்கு அதிகம் தெரியும் என்று நினைக்கும் மக்கள் இந்தியாவில் உள்ளனர். பிரதமர் மோடி அப்படிப்பட்டவர்தான். சிலர் தங்களுக்கு எல்லாம் தெரியும் என நினைத்து, வரலாற்றை வரலாற்றாசிரியர்களுக்கும், அறிவியலை விஞ்ஞானிகளுக்கும், ராணுவத்திற்குப் போரையும் கற்பிக்க முடியும் என்றும் நம்புகிறார்கள்.


உலகம் மிகவும் பெரியது. சிக்கலானது. எந்தவொரு நபரும் எல்லாவற்றையும் அறிந்து கொள்ள முடியாது. இந்தியாவில் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று உறுதியாக நம்பும் ஒரு கூட்டம் இருக்கிறது. கடவுளை விட தங்களுக்கு அதிகம் தெரியும் என்று நினைக்கிறார்கள்.


அவர்கள் கடவுளுடன் அமர்ந்து என்ன நடக்கிறது என்பதை அவருக்கு கற்பிக்கலாம். நிச்சயமாக, நமது பிரதமர் அத்தகைய ஒரு நபர்தான். நீங்கள் மோடியை கடவுளுடன் உட்கார வைத்தால், பிரபஞ்சம் எவ்வாறு இயங்குகிறது என்பதை கடவுளுக்கு கற்பிப்பார். நான் எதை உருவாக்கினேன் என்பதில் கடவுளே குழப்பமடைவார்" என்றார்.