வெளிவிவகாரங்கள் துறை அமைச்சர் ஜெய்சங்கர், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரெக் ஓ பிரையன் உள்பட 11 பேர் மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளனர். இதன் மூலம், மாநிலங்களவையில் பாஜகவின் எண்ணிக்கை உயர்கிறது.  மாநிலங்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையிலும், அதன் எண்ணிக்கை 92லிருந்து 93ஆக உயர்ந்துள்ளது.


மாநிலங்களவையில் கூடும் பாஜகவின் பலம்:


மேற்கு வங்கத்தில் 6 மாநிலங்களவை இடங்களுக்கும், குஜராத்தில் 3 இடங்களுக்கும், கோவாவில் ஒரு இடத்துக்கும் ஜூலை 24ஆம் தேதி தேர்தல் நடத்தப்படவிருந்தது. ஆனால், அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களுக்கு எதிராக எந்த வேட்பாளரும் போட்டியிடாத நிலையில், போட்டியிட்ட அனைவரும் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட உள்ளனர்.


மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாளாகும். 6 திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்களும், ஐந்து பாஜக வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வாகின்றனர். மேற்கு வங்கத்தில் மாநிலங்களவை இடம் ஒன்றுக்கு நடத்தப்பட்ட இடைத்தேர்தலிலும் திரிணாமுல் வெற்றி பெற்றுள்ளது.


மாநிலங்களவைக்கு இரண்டாவது முறையாக தேர்வாகும் ஜெய்சங்கர், பாபுபாய் தேசாய் மற்றும் கேசர்தேவ் சிங் ஜாலா ஆகிய பாஜக வேட்பாளர்கள் குஜராத்தில் இருந்து தேர்வு செய்யப்படுகின்றனர். அதுமட்டுன்றி, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அனந்த் மகாராஜ், கோவாவைச் சேர்ந்த சதானந்த் ஷெட் தனவாடே ஆகியோரும் பாஜக வேட்பாளராக நின்று தேர்வாகின்றனர்.


டெரெக் ஓ பிரையனைத் தவிர, சுகேந்து சேகர் ராய், டோலா சென், சாகேத் கோகலே, சமுருல் இஸ்லாம் மற்றும் பிரகாஷ் பாரிக் ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் ஆவர்.


தொடர் சரிவை சந்திக்கும் காங்கிரஸ்:


மாநிலங்களவையில் காங்கிரஸ் மேலும் ஒரு இடத்தை இழக்க உள்ளது. இதனால், அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 30ஆக குறைய உள்ளது. ஜூலை 24ஆம் தேதிக்குப் பிறகு, 245 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவையில் மேலும் 7 இடங்கள் காலியானதாக அறிவிக்கப்படவிருக்கிறது.


ஜம்மு காஷ்மீரில் நான்கு இடங்கள், இரண்டு நியமன இடங்கள் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் ஒரு இடம் காலியாகிறது. நியமன உறுப்பினர்களை தவிர்த்து, மாநிலங்களவையில் 238 உறுப்பினர்கள் உள்ளனர். எனவே, மாநிலங்களவையில் சட்டத்தை நிறைவேற்ற 120 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது.


இதில், பாஜகவுக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் 105 உறுப்பினர்கள் உள்ளனர். இதுமட்டும் இன்றி, ஐந்து நியமன எம்.பி.க்கள் மற்றும் இரண்டு சுயேச்சை எம்.பி.க்களின் ஆதரவையும் பாஜக பெறுவது உறுதி. எனவே அரசாங்கத்திற்கு ஆதரவான உறுப்பினர்களின் எண்ணிக்கை 112 ஆக இருக்கிறது. 


ஆந்திராவை ஆளும் ஒய்.எஸ் .ஆர். காங்கிரஸ், ஒடிசாவை ஆளும் பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகளும் முக்கியமான விவகாரங்களில் பாஜகவுக்கு ஆதரவான நிலைபாட்டை எடுத்துள்ளது.