உக்ரைன் போர் யாருக்கும் நன்மை பயக்காது என்றும் உலகில் உள்ள அனைவரின் மீதும் இது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் இம்மாதிரியான விரோதங்களுக்கு இந்தியா எதிராக உள்ளது என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.






ஆஸ்திரேலியாவுக்கு அரசுமுறை பயணமாக சென்றுள்ள ஜெய்சங்கர், அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் பென்னி வோங்குடன் இணைந்து செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது, ஐநா பொது சபை கூட்டத்தில் ரஷியாவுக்கு எதிராக கொண்டு வரப்பட உள்ள வரைவு தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்குமா என கேள்வி முன்வைக்கப்பட்டது. ஆனால், அதற்கு அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.


இதுகுறித்து விரிவாக பேசிய ஜெய்சங்கர், "விவேகம் மற்றும் கொள்கையின் அடிப்படையில், நாங்கள் யாருக்கு வாக்கு அளிப்போம் என்பதை முன்கூட்டியே கணிக்க மாட்டோம். உக்ரைனில் நடந்த மோதலுக்கு எதிராக இருக்கிறோம். இந்த போர், அதில் ஈடுபடுபவர்களுக்கோ அல்லது சர்வதேச சமூகத்திற்கோ உண்மையில் எந்த பயனும் அளிக்காது என்று நாங்கள் நம்புகிறோம். 


உலகளவில் தெற்கில் அமைந்துள்ள ஒரு நாடாக, குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில், எரிபொருள் மற்றும் உணவு மற்றும் உரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை இது எவ்வளவு பாதித்துள்ளது என்பதை நாங்கள் நேரடியாகப் பார்த்து வருகிறோம். எனவே, எங்களது பிரதமர் சில வாரங்களுக்கு முன்பு ஒரு உச்சி மாநாட்டில், இது போருக்கான நேரம் அல்ல என்று கூறினார். 


மேலும், உங்களுக்குத் தெரியும், இன்று உலகின் ஏதோ ஒரு மூலையில் நடக்கும் ஒரு மோதல், உலகம் முழுவதும் உள்ள அனைவருக்கும் மிகவும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். அது நம் சிந்தனையை தொடர்ந்து வழிநடத்துகிறது என்று நான் நினைக்கிறேன்" என்றார்.


இதை தொடர்ந்து, ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் பென்னி வோங், ரஷியாவின் படையெடுப்பிற்கு ஆஸ்திரேலியாவின் கண்டனத்தை மீண்டும் பதிவு செய்தார். "உக்ரைன் பகுதிகளை தங்களுடன் இணைக்க ரஷியா மேற்கொண்ட பொது வாக்கெடுப்பு சட்டவிரோதமானது" என அவர் கூறினார். ரஷ்யா பொது வாக்கெடுப்பு ஒன்றை அங்கு நடத்தி உக்ரைனில் உள்ள நான்கு பகுதிகளை தன்னுடன் இணைத்து கொண்டது. பொது வாக்கெடுப்பை அங்கீகரிக்க போவதில்லை எனக் கூறி ஐக்கிய பொது சபை கூட்டத்தில் ரஷியாவுக்கு எதிராக விவாதம் மேற்கத்திய நாடுகள் விவாதம் ஒன்று நடத்தவுள்ளன. அதில், இந்தியா என்ன நிலைபாடு எடுக்க போகிறது என்பது பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.


முன்னதாக, உக்ரைன் தொடர்பான அனைத்து தீர்மானங்களிலும் ரஷியாவுக்கு எதிராக வாக்களிக்காமல், இந்தியா புறக்கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.