நாக்பூரைச் சேர்ந்த 85 வயதான ஆர் எஸ் எஸ் அமைப்பைச் சேர்ந்த நபரான நாராயண் கொரோனாவால் பாதிக்கப்பட்டு நாக்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் சிகிச்சைபெற்று வந்தார். அப்போது தன்னுடைய 40 வயது கணவருக்கு படுக்கை கிடைக்காமல் பெண் ஒருவர் தவித்ததாகவும், அதனைக் கண்ட பெரியவர் தன்னுடைய மகளை அழைத்து தன் படுக்கையை தானமாக கொடுத்துவிட்டு வீடு திரும்பலாம் எனக் கூறியதாகவும், அதன்படி முதியவர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு சென்றதாகவும் செய்தி வெளியானது. வீட்டுக்கு சென்று 3 நாட்களில் நாராயண் காலமானார். அதனையடுத்து படுக்கையை தானம் செய்த முதியவர் காலமானார் என பலரும் இணையத்தில் நெகிழ்ச்சியாக பதிவிட்டு வந்தனர். ஆனால் அந்த கதைக்கும் முற்றிலும் மாறுபட்ட கதையை மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 




இதுகுறித்து The Indian Express வெளியிட்ட செய்தியில், நாராயண் விவகாரம் குறித்து பேசிய மருத்துவர் ஷீலு சிமுர்கர், தபோல்கர் ஏப்ரல் 22-ஆம் தேதி மாலை 5.55 மணிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நாங்கள் அவரை ஆக்சிஜன் வசதிகொண்ட படுக்கையில் அனுமதித்தோம். அவர் உடல்நிலை மோசமாக இருந்ததால் வேறு மருத்துவமனைக்கு மாற்ற வேண்டுமென உறவினர்களிடம் கூறினோம். அவர்கள் சரியென கூறிவிட்டு கிளம்பிவிட்டார்கள். அவர்கள் மீண்டும் இரவு 7.55 மணிக்கு மருத்துவமனைக்கு வந்து டிஸ்சார்ஜ் செய்துகொள்வதாக தெரிவித்தார்கள். ஏனென்று தெரியாது. ஆனால் அவரை உயர்தர மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டுமென்றே கூறினோம். அவரது மருமகன் சரியென கூறி கையொப்பமிட்டு அழைத்துச் சென்றார். ஆனால் இணையத்தில் வெளியான செய்திகள் போல எதுவும் நடந்ததாக தெரியவில்லை. அப்படி நடந்ததாக மருத்துவமனை ஊழியர்கள் யாருக்கும் தெரியவும் இல்லை. இந்த மருத்துவமனையில் 110 கொரோனா படுக்கைகள் உள்ளன. அதில் 18 படுக்கைகள் ஐசியூ படுக்கைகள். மருத்துவமனையில் அன்றைய தினம் 5 படுக்கைகள் தயாராகவே இருந்தது என்றார்


இந்த விவகாரம் குறித்து பேசிய உயிரிழந்த முதியவரின் மருமகன் அமோல், எனக்கு கொரோனா பாசிட்டிவ். நான் பேசும் நிலையில் இல்லை. அன்று நடந்ததுதான் உண்மை. அவர் உதவும் மனப்பான்மை கொண்டவர்தான். அதில் மாற்றுக்கருத்து இல்லை. அவர் இறந்தேவிட்டார். இதைப்பற்றி இப்போது பேச விருப்பமில்லை எனத் தெரிவித்தார்.