மத்தியப்பிரதேசத்தின் ரைசன் மாவட்டத்தில் உள்ள ஒரு காட்டில் உள்ள ஒரு பெரிய மரத்தை அப்பகுதியைச் சேர்ந்த பழங்குடியினத்தை சேர்ந்த ஒருவர் வெட்டியுள்ளார். இந்த விவகாரம் வனத்துறைக்கு தெரியவரவே அவருக்கு ரூ. 1.20 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அந்த மரம் கொடுக்கும் பயன்களின் அடிப்படையில் அபராதத்தொகை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரி தெரிவித்தார். 30 வயதான ஜோட் லால் பிலாலா என்ற இளைஞர் சாகோன் வகை மரத்தை ஜனவரி மாதம் வெட்டியுள்ளார். அந்த விவகாரத்தில் ஏப்ரல் 26-ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து தெரிவித்துள்ள வனத்துறை அதிகாரி மகேந்திர சிங், இந்திய வனவியல் ஆராய்ச்சியின் படி, வெட்டப்பட்ட மரமானது 50 வருடத்தில் ரூ.11.97 லட்சத்துக்கு ஆக்சிஜன் வழங்கும், ரூ.23.68 லட்சத்துக்கு காற்று மாசைக் குறைக்கும், ரூ.19 லட்சம் மதிப்புக்கு மண் அரிப்பை தடுக்கும், ரூ.4 லட்சம் மதிப்புக்கு தண்ணீரை சுத்தப்படுத்தும், மொத்தமாக மரத்தின் மதிப்பு ரூ.60 லட்சத்தை தாண்டும். அதன் அடிப்படையில் தான் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இளைஞர் தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். மரங்களை வெட்டி ஃபர்னிச்சர் நிறுவனங்களுக்கு விற்று வருகிறார் என்றார்.
இதுகுறித்து தெரிவித்துள்ள கைது செய்யப்பட்ட இளைஞரின் உறவினர், நாங்கள் காட்டுப்பகுதியில்தான் வசித்து வருகிறோம். நாங்கள் வளர்ந்த பழைய மரங்களை வெட்டி வீடுகள் கட்ட பயன்படுத்துகிறோம். ஆனால் வனத்துறை அதிகாரிதான் எங்களை வதைக்கிறார் என்கிறார். இது குறித்து தெரிவித்துள்ள வனத்துறை தரப்பு வழக்கறிஞர், இந்திய வனத்துறை சட்டத்தின்படி, இது போன்ற சம்பவத்திற்கு ரூ.500 அபராதமும், 6 மாத சிறைத்தண்டனையும் உண்டு. ஆனால் வனத்துறை அதிகாரி மரம் கொடுக்கும் பயனின் அடிப்படையில் அபராதத்தை குறிப்பிட்டுள்ளார்.