இந்திய மாணவர்கள், வெளிநாட்டுக்கு சென்று கல்வி கற்று அங்கேயே குடியேறுவது தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. இந்தியாவை காட்டிலும் அங்கு கல்வியின் தரம் சிறப்பாக இருப்பதாலும் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காகவும் இளம்தலைமுறையினர் வெளிநாட்டினை விரும்புகின்றனர்.
இந்நிலையில், பிகாரின் ஆளும் கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் தெரிவித்த கருத்து பேசுபொருளாக மாறியுள்ளது. இளம்தலைமுறையினர் வெளிநாட்டில் வேலையை தேடி கொள்ள வேண்டும் என்றும் அங்கேயே குடிபெயர வேண்டும் என்றும் அப்துல் பாரி சித்திக் தெரிவித்துள்ளார்.
நாட்டில் இஸ்லாமியர்கள் பாகுபாட்டுடன் நடத்தப்படுவதாக மறைமுகமாக விமர்சித்த அவர், நாட்டில் நிலைமை சரி இல்லை என கூறியுள்ளார். ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தேசிய பொது செயலாளரான சித்திக், இதுகுறித்து விரிவாக பேசுகையில், "என்னுடைய வாழ்க்கையை மேற்கோள் காட்டி நாட்டில் நிலவும் சூழலை எடுத்துக்காட்டாக கூற விரும்புகிறேன்.
எனக்கு ஹார்வர்டில் படிக்கும் ஒரு மகனும், லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் பட்டம் பெற்ற ஒரு மகளும் உள்ளனர். வெளிநாட்டில் வேலை தேடுங்கள், முடிந்தால் அங்கு குடியுரிமை பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளேன்.
நீங்கள் மட்டும் இன்னும் இங்கேயே (இந்தியாவில்) வாழ்ந்து வருகிறீர்களே என்று என் பிள்ளைகள் என்னிடம் கேள்வி எழுப்பியபோது, உங்களால் இதை சமாளிக்க முடியாது என்று அவர்களிடம் சொன்னேன்" என்றார்.
இஸ்லாமியர்கள் மற்றும் பாஜக அரசு பற்றி அவர் நேரடியாக குறிப்பிடவில்லை என்றாலும் பிகார் மாநில பாஜக அவரின் கருத்துகளை கடுமையாக சாடியுள்ளது.
சித்திக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாஜக செய்தித் தொடர்பாளர் நிகில் ஆனந்த், "சித்திக்கின் கருத்து இந்தியாவுக்கு எதிரானது. அவர் கஷ்டபடுகிறார் என்றால், அவர் ஒரு அரசியல் தலைவராக இங்கு அனுபவிக்கும் சலுகைகளை விட்டுவிட்டு பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டும். அவரை யாரும் தடுக்க மாட்டார்கள்.
சித்திக் ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத்தின் (தேஜஸ்வி யாதவின் தந்தை) நெருங்கிய உதவியாளர். அவரது பேச்சுகள் முஸ்லிம்களை திருப்திப்படுத்தும் அவரது கட்சியின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கின்றன" என்றார்.
சித்திக்கின் கருத்து விவாத்தை கிளப்பியுள்ள நிலையில், ராஷ்டிரிய ஜனதா தளத்தின் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் அவரது கருத்துக்கு ஆதரவை தெரிவித்துள்ளது.