கொல்கத்தா மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜனவரி 20 ஆம் தேதி தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி கொல்கத்தா ஆர்ஜிகார் மருத்துவமனை வளாகத்தில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார்.
நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த வழக்கில் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்த சஞ்சய் ராய் குற்றம் சாட்டப்பட்டார். இதையடுத்து அடுத்த நாளே அவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு சென்றது.
விசாரணையில் சஞ்சய் ராய் மீது பாலியல் வன்கொடுமை, கொலை தொடர்பாக சஞ்சய் ராய் மீது குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது. மேலும், மருத்துவமனை கல்லூரி முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் மற்றும் காவல்துறை அதிகாரி அபிஜித் மோண்டல் ஆகியோர் போலீசார் கைது செய்தனர். காரணம் ஆதாரங்களை அழிக்க முற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தவறியதால் அவர்களுக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
இந்த வழக்கின் மொத்த விசாரணையும் மூடிய அறைக்குள் கேமரா பதிவுடன் நடைபெற்றது. பாதிக்கப்பட்டவரின் பெற்றோர், சிபிஐ, போலீஸ் அதிகாரிகள், மருத்துவர்கள், தடயவியல் நிபுணர்கள், ஊழியர்கள் என 50 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டன. கிடைத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பில் சஞ்சய் ராய் குற்றவாளி என அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் தண்டனை விவரம் திங்கள் கிழமை அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.