"பாகிஸ்தானை 2 ஆக உடைங்க.. உங்க பின்னாடி 140 கோடி பேர் இருக்கோம்" கர்ஜித்த ரேவந்த் ரெட்டி
பாகிஸ்தானை இரண்டாக உடைத்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி வலியுறுத்தியுள்ளார். இது, அரசியல் செய்வதற்கான நேரம் இல்லை என்றும் 140 கோடி இந்தியர்களும் தங்களுக்கு துணை நிற்பதாகவும் ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார்.

உலக நாடுகள் மத்தியில் பஹல்காம் தாக்குதல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், பாகிஸ்தானை இரண்டாக உடைத்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி வலியுறுத்தியுள்ளார். இது, அரசியல் செய்வதற்கான நேரம் இல்லை என்றும் 140 கோடி இந்தியர்களும் தங்களுக்கு துணை நிற்பதாகவும் ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார்.
"பாகிஸ்தானை 2ஆக உடைக்க வேண்டும்"
ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். லஷ்கர் ஏ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பாக கருதப்படும் தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட், இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. இதன் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாக கூறி, அந்நாட்டுக்கு எதிராக இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இந்த நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த தாக்குதலை கண்டித்து அமைதி பேரணி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி பேரணி நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட அம்மாநில முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ரேவந்த் ரெட்டி, பாகிஸ்தானை இரண்டாக உடைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
"பதிலடி கொடுக்க வேண்டிய நேரம் இது"
இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "நீங்கள் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். 140 கோடி இந்தியர்களாகிய நாங்கள் உங்களுடன் நிற்போம். பாகிஸ்தானை இரண்டு பகுதிகளாகப் உடைத்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை இந்தியாவுடன் இணைக்க வேண்டும். நாங்கள் அனைவரும் உங்களுடன் இருக்கிறோம். அரசியல் செய்ய இது நேரமில்லை.
பயங்கரவாதிகள் நம் சக குடிமக்கள் மீது தாக்குதல் நடத்திய இந்த நேரத்தில், நாட்டின் 140 கோடி பேரும் இந்தத் தாக்குதலால் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்போது, கடுமையாக பதிலளிக்க கொடுக்க வேண்டிய நேரம் இது. தெலங்கானா மாநிலத்திலிருந்து, 4 கோடி மக்களும், உலகின் குறைந்தது 100 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் ஒன்றிணைந்து பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நமது பிரதமருக்கு நாங்கள் ஆதரவளிப்போம்.
பிரதமர் மோடி அவர்களை, 1967 ஆம் ஆண்டு, நம்மை சீனா தாக்கியபோது, இந்திரா காந்தி உறுதியான பதிலடி கொடுத்தார். பின்னர், 1971 ஆம் ஆண்டு, பாகிஸ்தான் நம்மை தாக்கியபோது, இந்திரா காந்தி தகுந்த பதிலடி கொடுத்து பாகிஸ்தானை இரண்டாகப் பிரித்து, வங்கதேசத்தை உருவாக்கினார்.
பாகிஸ்தானின் செயல்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டிய நேரம் இது. நாம் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பேச்சுவார்த்தைகளுக்கான நேரம் முடிந்துவிட்டது. பொருத்தமான பதிலடி கொடுக்க வேண்டிய நேரம் இது" என்றார்.
இந்த பேரணியில் கலந்து கொண்ட ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவரும் ஹைதராபாத் எம்பியுமான ஓவைசி, "பயங்கரவாதத்திற்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றுபட்டுள்ளோம். ரேவந்த் ரெட்டி மற்றும் ஆயிரக்கணக்கான இந்திய குடிமக்களுடன் சேர்ந்து, கோழைத்தனமான பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிரான மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியில் நானும் பங்கேற்றேன்" என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.





















