மணிப்பூர் மாநிலத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட 11 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 19ம் தேதி நடந்த தேர்தலின்போது துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றதை அடுத்து மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.






முதல்கட்ட நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களுக்கு நடைபெற்று முடிந்தது. முக்கியமாக கலவர பூமியாக மாறியுள்ள மணிப்பூரிலும் மக்களவை தேர்தல் நடைபெற்றது. அதாவது, மணிப்பூரில் மொத்தம் 2 மக்களவை தொகுதிகள் உள்ளன. அதில், இன்னர் மணிப்பூர் தொகுதிக்கு ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. ஆனால், அவுட்டர் மணிப்பூர் தொகுதியில் ஏப்ரல் 19 மற்றும் ஏப்ரல் 26 என இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்க உள்ளது.






கடந்த மே மாதம் 3 ஆம் தேதியில் இருந்து மணிப்பூரில் இனக்கலவரம் நடந்து வருகிறது. கிட்டத்தட்ட 11 மாதங்களாக அங்கும் இங்குமாய் வன்முறை சம்பவங்கள் வெடித்து வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில், வாக்குப்பதிவு நடக்கும் நாளில் மணிப்பூரில் துப்பாக்கிச்சூடு நடந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


மொய்ராங் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட தமன்போக்பி வாக்குச்சாவடியில் அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் காணப்பட்டது. இதன் காரணமாக 11 வாக்குச்சாவடிகளில் மீண்டும் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது.


இந்நிலையில், மணிப்பூரின் இன்னர் மணிப்பூர் நாடாளுமன்றத் தொகுதியின் 11 வாக்குச் சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணி முதல் வாக்களிக்க வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.  மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த 11 வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.