மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் செவ்வாய்கிழமையன்று, முகமது நபிக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சியின் நீக்கப்பட்ட செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவின் கருத்துக்கள் பாஜக ஆட்சியை பாதிக்காது என்று கூறியுள்ளார். வளைகுடா நாடுகளுடனான உறவிலும் பாதிப்பு ஏற்படாது என்று அவர் மேலும் உறுதியளித்தார்.
மதக் கலவரம்
சர்ச்சைக்குரிய பேச்சுக்களால் புகழ்பெற்ற பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, அண்மையில் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதில் பேசிய நுபுர் ஷர்மா இறைத்தூதரான நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசினார். இதனை பாஜக நிர்வாகி நவீன் ஜிண்டால் ட்விட்டரில் பகிர்ந்தார். இதனால் உத்தரபிரதேசத்தில் பெரும் மதக் கலவரமே வெடித்தது.
வளைகுடா நாடுகள் கண்டனம்
இந்த நிலையில் நுபுர் ஷர்மாவின் சர்ச்சைக்குறிய பேச்சு அரபு நாடுகளிலும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி கொந்தளிப்பை ஏற்படுத்தியது. குவைத், கத்தார், ஓமன் ஆகிய நாட்டு அரசுகள் இந்தியாவில் நடக்கும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்தும், பாஜக பிரமுகரின் பேச்சுக்கும் கடும் கண்டனங்களை தெரிவித்து இருந்தனர். அரபு நாட்டு மக்கள் ட்விட்டரில் #Boycott India என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வந்தனர்.
கட்சி நடவடிக்கை
இந்த நிலையில் பாஜக தேசிய செயலாளர் அருண் சிங் வெளியிட்ட அறிக்கையில், மத அடிப்படையில் இழிவுபடுத்துவது பாஜகவின் கொள்கைகளுக்கு எதிரானது என்றும், தங்கள் கட்சி அனைத்து மதங்களையும் மதிக்கிறது எனவும் கூறினார். இதனை தொடர்ந்து சர்ச்சைக்குறிய கருத்தை தெரிவித்த நுபுர் ஷர்மா கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார். அக்கட்சியை சேர்ந்த நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் கட்சியிலிருந்தே நீக்கப்பட்டு உள்ளனர்.
பியூஷ் கோயல் கருத்து
"இந்த அறிக்கை எந்த ஒரு அரசாங்க அதிகாரியாலும் வெளியிடப்பட்டவில்லை, எனவே இது அரசாங்கத்திற்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது, மேலும் கட்சியால் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வளைகுடா நாடுகள் அவ்வாறான அறிக்கையை வெளியிடக் கூடாது என்று மட்டும் குறிப்பிட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் வசிக்கும் அனைத்து இந்தியர்களும் பாதுகாப்பாக உள்ளனர், கவலைப்பட வேண்டாம்." என்று பியுஷ் கோயல் கூறியிருக்கிறார்.
வழக்கு நிலை
இதற்கிடையில், நூபுர் சர்மாவின் சர்ச்சைக்குரிய மதக் கருத்துகள் தொடர்பாக மும்பையில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. "காவல் துறையால் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. அவர் மீதான அடுத்த நடவடிக்கைகள் குறித்து முடிவு எடுக்கப்படும்" என்று மாநில உள்துறை அமைச்சர் திலீப் வால்ஸ் பாட்டீல் கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்